ஜெருசலேம்: 'அமெரிக்கா – இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்களால், யுரேனியம் செறிவூட்டும் திறனையும் கண்டம்

ஜெருசலேம்: ‘அமெரிக்கா – இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்களால், யுரேனியம் செறிவூட்டும் திறனையும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரிக்கும் திறனையும் ஈரான் இழந்துவிட்டதால் போர் விரைவில் முடிவுக்கு வரும்’ என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிப்பட தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த ஈரான் புரட்சிகர பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் ஜெனரல் அலி முகமது நைனி, ‘எங்கள் திறன் குறையவில்லை; எதிரிகள் சோர்வடையும் வரை போர் தொடரும்’ என தெரிவித்திருந்தார். இதை தெரிவித்த சில மணி நேரங்களிலேயே இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் அவர் பலியானார்.

மேற்காசிய நாடான ஈரான் மீது, அணுசக்தி அச்சுறுத்தலை காரணம் காட்டி அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த 28ம் தேதி போரை துவக்கின. இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் தன் அண்டை நாடுகளில் உள்ள எரிவாயு நிலையங்கள் மற்றும் மேற்காசிய பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

பலவீனம்

இந்நிலையில், போர் குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஈரான் அழிக்கப்பட்டு வருகிறது. மக்கள் நினைப்பதைவிட போர் விரைவில் முடிவடையும்,” என கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: முதலில் நான் உயிரோடு இருக்கிறேன் என்பதை சொல்ல விரும்புகிறேன். அமெரிக்க – இஸ்ரேல் கூட்டாண்மை மிகவும் முக்கியமானது. நாங்கள் முழு மேற்காசியாவையும், ஏன் முழு உலகையும் பாதுகாக்கிறோம். ஈரானை பொறுத்தவரை , நானும் அமெரிக்க அதிபர் டிரம்பும் ஒரே கருத்தை கொண்டுள்ளோம். டிரம்பிற்கு உலகம் பெரிதும் கடமைப்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

கடந்த மூன்று வாரங்களாக ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட அமெரிக்க – இஸ்ரேலிய வான்வழி தாக்குதல்களால், யுரேனியம் செறிவூட்டும் திறனையும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரிக்கும் திறனையும் ஈரான் இழந்துவிட்டது.

நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம். ஈரான் அழிக்கப்பட்டு வருகிறது-. கூட்டுப்படைகளின் நடவடிக்கையால், ஈரானின் ராணுவ திறன் கணிசமாக பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, போர் விரைவில் முடிவுக்கு வரும். ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் ஆயுத கிடங்குகள் பெரியஅளவில் தாக்கப்பட்டு வருகின்றன. இவை விரைவில் அழிக்கப்படும்.

அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு தேவையான பாகங்களை உருவாக்கும் தொழிற்சாலைகளை, நாங்கள் தற்போது குறிவைத்து அழித்து வருகிறோம்.

தாக்குதல் நிறுத்தம்

ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு தளங்கள் மீதான தாக்குதல் என்பது இஸ்ரேலின் தனிப்பட்ட முடிவு. அதிபர் டிரம்பின் வேண்டுகோளுக்கு இணங்க, ஈரானின் முக்கிய எரிவாயு தளங்கள் மீதான கூடுதல் தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளது. இதுவரை வான்வழி தாக்குதல்கள் மட்டுமே நடத்தப்பட்டு வந்தாலும், தரைவழியாக தாக்குதல் நடத்துவதற்கும் பல வாய்ப்புகள் சாத்தியமாகவே உள்ளன.

ஈரானின் ஆட்சிமுறை ஆட்டம் கண்டு வருகிறது. தற்போதைய சூழலில் ஈரானை யார் வழிநடத்துகின்றனர் என்றே தெளிவாக தெரியவில்லை. அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளிடையே கடும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த மோதல், ஒரு புரட்சியை நோக்கி செல்லுமா என்பது குறித்து முன்கூட்டியே இப்போது கணிக்க முடியாது. அதை வெளிப்படுத்துவதும், சரியான தருணத்தை தேர்ந்தெடுத்து எழுச்சி பெறுவதும் ஈரான் மக்களின் கையில் தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சவால் விட்ட சில மணி நேரங்களில் பலியான ராணுவ செய்தி தொடர்பாளர்

இஸ்ரேல் பிரதமரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்ததுடன், ஈரானின் ஏவுகணை தயாரிப்பு திறன் இன்னமும் குறையவில்லை என்றும், போர் தொடரும் எனவும் ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் செய்தி தொடர்பாளர் ஜெனரல் அலி முகமது நைனி கூறியிருந்தார். நைனி மேலும் கூறியிருந்ததாவது: ஈரான் இன்னும் ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. போர் சூழலிலும் எங்களது ஏவுகணை தொழில், 20க்கு 20 மதிப்பெண் பெறும் அளவுக்கு சிறப்பாக உள்ளது. ஏவுகணைகளை சேமித்து வைப்பதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. எதிரிகள் முற்றிலும் சோர்வடையும் வரை போர் தொடர வேண்டும் என்பதே ஈரான் மக்களின் எதிர்பார்ப்பு. ஈரான் மீதான போர் நிழல் நீங்கும் வரை இது தொடரும். இவ்வாறு அவர் கூறியிருந்தார். ஈரானின் ஏவுகணை பலம் குறையவில்லை என சவால் விட்ட சில மணி நேரங்களிலேயே, இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் நைனி கொல்லப்பட்டது ஈரானுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Image 1551641

அமெரிக்காவின் ‘எப் - 35’ போர் விமானம் அழிப்பு

அமெரிக்காவின் வீழ்த்த முடியாத விமானம் என்று அழைக்கப்படும் உலகின் அதிநவீன ஸ்டெல்த் ரக போர் விமானமான, ‘எப் - 35 லைட்னிங் 2’ தாக்கப்பட்டிருப்பது உலகையே அதிர வைத்துள்ளது.
நேற்று முன்தினம் அதிகாலையில், மத்திய ஈரான் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின், ‘எப் – 35’ ரக போர் விமானம், ஈரான் ஏவுகணையால் தாக்கி அழிக்கப்பட்டதாக ஐ.ஆர்.ஜி.சி., எனும் ஈரான் புரட்சிகர பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. அமெரிக்க ராணுவம் நேரடியாக இதை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், நெருக்கடி நிலை காரணமாக, எப் – 35 விமானம் ஒன்று தரையிறக்கப்பட்டதாக அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், விமானி பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
‘எப் - 35’ ரக விமானங்கள் ரேடார்களில் சிக்காமல் பறக்கக்கூடிய தொழில்நுட்பம் கொண்டவை. உலக வரலாற்றிலேயே, ‘எப் – 35’ விமானம் எதிரி நாட்டு தாக்குதலுக்கு உள்ளாவது இதுவே முதல்முறை. இதுகுறித்த வீடியோவை ஈரான் வெளியிட்டுள்ளது. இப்போரில், கடந்த மூன்று வாரங்களில் மட்டும் அமெரிக்கா 16 விமானங்களை இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, அமெரிக்காவின் வான்வழி தாக்குதலுக்கு விடப்பட்ட மிகபெரிய சவாலாக பார்க்கப் படுகிறது.

Image 1551643

நேற்றும் தொடர்ந்த தாக்குதல்கள்

ஈரானின் மிகப்பெரிய எரிவாயு நிலையமான ‘சவுத் பார்ஸ் இயற்கை எரிவாயு மையம்’ மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் தன் அண்டை நாடுகளின் எரிசக்தி நிலையங்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
குவைத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலால் அதன் பல பிரிவுகள் தீப்பற்றி எரிந்தன. குவைத்தின் மினா அல் – அஹ்மதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் நேற்று மீண்டும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இதில், அந்த மையத்தின் பல பிரிவுகளில் தீ விபத்து ஏற்பட்டதாக குவைத் தெரிவித்து உள்ளது. மினா அல் – அஹ்மதி நிலையம் நாள் ஒன்றுக்கு 7.30 லட்சம் பேரல்கள் எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் கொண்டது.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பிரிவுகள் மூடப்பட்டுள்ளதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பஹ்ரைன் நாட்டின் எரிபொருள் கிடங்கு ஒன்றின் மீது ஏவுகணை சிதறல்கள் விழுந்ததில், நேற்று தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், தன் எண்ணெய் வளம் மிக்க கிழக்கு மாகாணத்தை குறிவைத்து வந்த பல ஈரானிய ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகருக்கு மேலே வான் பாதுகாப்பு மண்டலம், ஈரானிய ஏவுகணைகளை இடைமறித்ததால், நேற்று அதிகாலை பலத்த வெடி சத்தங்கள் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அந் நாட்டு ஊடக அலுவலகம் தெரிவித்து உ ள்ளது.

Image 1551642

எதிரிகளின் பாதுகாப்பை நாம் பறிக்க வேண்டும்

ஈரான் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப், இஸ்ரேலால் கொல்லப்பட்டதையடுத்து, அதிபர் மசூத் பெசெஷ்கியான் வாயிலாக ஈரானின் புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ‘நம் நாட்டின் அமைதியை குலைக்கும் எதிரிகளின் பாதுகாப்பை நாம் பறிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார். இதன் வாயிலாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது கடுமையான பதிலடி தாக்குதல்களை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

Source link