புதுடில்லி: டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை துணைவேந்தர் மீது, போலீசில் இரண்டு மாணவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
டில்லி பல்கலை மாணவர் ரோவின் சிங், வசந்த் குஞ்ச் போலீஸ் ஸ்டேஷனில், 22ம் தேதி கொடுத்துள்ள புகார் மனு:
நான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவன். ஜவஹர்லால் நேரு பல்கலை துணைவேந்தர் சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட், தலித் சமூகம் குறித்து பிப்ரவரி மாதம் இழிவான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அவருடைய இந்தக் கருத்துக்கள் எனக்கும் கடும் அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. உயர் பதவியில் இருக்கும் ஒருவர் இப்படி பேசியது கடும் வேதனையையும் ஏற்படுத்தியது.
எனவே, துணைவேந்தர் சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட் மீது, பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் பட்டியல் ஜாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்பு சட்டம், 1989 ஆகிய சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்கலை வளாகங்களில் தலித் மற்றும் பிற விளிம்புநிலை மாணவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் நியாயமாகவும், விரைவாகவும் விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல, ஜவஹர்லால் நேரு பல்கலையில் படிக்கும், பெயர் வெளியிட விரும்பாத மற்றொரு மாணவரும், வசந்த் குஞ்ச் போலீசில் 23ம் தேதி கொடுத்துள்ள புகார் மனுவில், ‘பட்டியல் இனத்துக்கு எதிராக துணைவேந்தர் சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட் கூறிய கருத்துகள், ஜாதிய வன்கொடுமைக்கு இணையானது. நான் அந்த இனத்தை சேர்ந்தவன் என்பதால், பாகுபாட்டுக்கு ஆளாகும் அபாயத்தை ஏற்படுத்திஉள்ளன.
‘துணைவேந்தர் மீது, பட்டியல் ஜாதி மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.
