ஜோர்டான் ராணுவ தாக்குதலில் பொதுமக்களில் 7 பேர் பலி; சிரியா கடும் கண்டனம்

அம்மான்

ஜோர்டான் ராணுவ தாக்குதலில் பொதுமக்களில் 7 பேர் பலியானதற்கு சிரியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

ஜோர்டான் நாட்டின் கராக் நகரில் ஹமவுத் கிராமத்தில் கிரேக்க பாரம்பரியம் கொண்ட ஆலயம் ஒன்றில் கடந்த வாரம் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது மர்ம நபர்கள் சிலர் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில், சிறுவர்கள் உள்பட 9 பேர் பலியானார்கள். 34 பேர் காயமடைந்தனர்.

மன்னர் இரங்கல்

இந்த சம்பவத்திற்கு ஜோர்டான் மன்னர் அப்துல்லா பின் உசைன்-2 வருத்தம் தெரிவித்ததுடன், அவர்களுடைய குடும்பத்தினருக்கு இரங்கலும் தெரிவித்து கொண்டார். கனடா பிரதமர் மார்க் கார்னியும் வருத்தம் தெரிவித்து உள்ளார். ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரசும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், வருத்தமும் தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளை ஜோர்டான் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

20 பயங்கரவாதிகள் பலி

பயங்கரவாத தாக்குதலுக்கு பழிதீர்க்கும் நடவடிக்கையாக, சிரியா நாட்டின் எல்லைக்குள் புகுந்த ஜோர்டான் நாட்டு வான்படை விமானங்கள், பதுங்கியிருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து குண்டுமழை பொழிந்தன. உளவுத்தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த வான்வழி தாக்குதலில், 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஜோர்டான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எனினும், இந்த தாக்குதலின்போது சிரியாவின் எல்லையோர கிராமங்களான தாரா மற்றும் சுவைடா பகுதிகளில் இருந்த சில வீடுகள் மற்றும் கூடாரங்கள் மீதும் குண்டுகள் விழுந்து வெடித்தன.

7 பேர் பலி

இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட அப்பாவி பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தனர். இதற்கு ஜோர்டான் அரசு செய்தி தொடர்பாளர் முகமது அல்-மொமானி அதிகாரப்பூர்வ ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து உள்ளார். சிரிய அரசு இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், எங்களுடைய வான்வெளிக்குள் அத்துமீறுவது மற்றும் ஆக்கிரமிப்பது என்பது ஏற்று கொள்ள முடியாதது என தெரிவித்து உள்ளது.

விசாரணைக்கு உத்தரவு

ஆனால், சிரியாவுடன் ஒருங்கிணைந்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று ஜோர்டான் ராணுவம் தெரிவித்தது. எனினும், முன்கூட்டியே ஒருங்கிணைந்து செயல்படாமல், தாக்குதல் நடந்துள்ளது என்று சிரிய அரசு கூறுகிறது. இதுபற்றிய விசாரணைக்கும் உத்தரவிட்டு உள்ளது.

எனினும், எல்லையில் பயங்கரவாதத்தை முற்றிலும் ஒடுக்கவும், இரு நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இரு நாடுகளின் தலைமைகளும் இணைந்து பாதுகாப்பு ஒருங்கிணைப்பை பலப்படுத்தப்போவதாக தூதரக ரீதியாக அறிவித்துள்ளது.

Source link