புதுடில்லி:புதிய மஹிந்திரா எக்ஸ்.யூ.வி., 7.எக்ஸ்.ஒ., காரில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டாவின்சி சஸ்பென்ஷன் தொழில்நுட்பத்தின் தேவை அதிகரிப்பால், அதை உருவாக்கிய டெனிகோ நிறுவனம் புதிய உற்பத்தி ஆலை அமைப்பதாக அறிவித்துள்ளது.
பல கார் நிறுவனங்கள், இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்த விரும்புவதால், உற்பத்தியை இந்நிறுவனம் விரிவாக்கம் செய்ய உள்ளது. இதற்கான ஆலை அமைக்கும் இடம், காலம் மற்றும் முதலீடு குறித்து விரைவில் அறிவிக்க உள்ளது.
இந்த டாவின்சி சஸ்பென்ஷன் தொழில்நுட்பம், எந்த மின்னணு உதிரிபாகங்களையும் பயன்படுத்தாமல், இயந்திர பாகங்களின் வாயிலாக இயங்குகிறது. இந்த சஸ்பென்ஷன், சாலைகளுக்கேற்ப மாறுபட்டு பயணிகளுக்கு நல்ல சவுகரியம் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சஸ்பென்ஷன் தொழில்நட்பம், சீனா, ஐரோப்பா நாட்டு கார் நிறுவனங்களை ஈர்த்துள்ளது. டெனிகோ நிறுவனம், சஸ்பென்ஷன் தொழில்நுட்பம் உட்பட கார் எக்ஸாஸ்ட் அமைப்புகளையும் உற்பத்தி செய்கிறது.
