டாஸ்மாக் போக்குவரத்தில் தற்போது மிக முக்கியமான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே இரண்டு நாட்களுக்கு முன்பு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகமான டாஸ்மாக்கில் மதுபானக் கொள்முதலுக்கான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளைக் கட்டாயமாக்கும் வகையில் கொள்கை மாற்றங்களை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில், டாஸ்மாக் போக்குவரத்தில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுப்பதற்காகவும், சரக்குகள் சேதமடைவதைத் தடுப்பதற்காகவும் புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
மது பாட்டில்களை ஏற்றி இறக்கும்போது பாட்டில்களில் சேதம் ஏற்பட்டால், வெளிப்புறத்தில் உடைந்திருந்தால் கடை ஊழியர்கள்தான் பொறுப்பு எனவும், முறைகேடாகப் பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
தொடரும் புகார்கள்
மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபான பாட்டில்கள் உடைந்து போவதும், போக்குவரத்தின்போது சரக்குகள் சேதமடைவதும் தொடர்ச்சியான புகார்களாக இருக்கக்கூடிய சூழலில், அதனைத் தடுக்க டாஸ்மாக் நிறுவனம் இத்தகைய முயற்சியை முன்னெடுத்திருக்கிறது. இதில் சில முக்கிய விதிகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
டாஸ்மாக் நிறுவனத்தின் புதிய விதிகள்
1. பணப் பரிவர்த்தனைக்குத் தடை
சரக்குப் பெட்டிகளை இறக்குவதற்காகக் கடைப் பணியாளர்களுக்கும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் அல்லது ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே எந்தவிதமான பணப் பரிவர்த்தனையும் இருக்கக்கூடாது.
2. கட்டணத்தை நேரடியாக வழங்கும் நடைமுறை
போக்குவரத்து மற்றும் சரக்கு இறக்குவதற்கான கட்டணத்தை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் நேரடியாக ஒப்பந்ததாரருக்கு வழங்கும்.
3. பாதுகாப்பாகப் பெட்டிகளை இறக்கி, பாட்டில்களை எண்ணும் நடைமுறை
டாஸ்மாக் கடைகளுக்கு வரும் மதுபானப் பாட்டில்கள் அடங்கிய பெட்டிகளைப் போக்குவரத்து ஒப்பந்ததாரரின் தலைமையில் பாதுகாப்பான முறையில் கடைக்குள் இறக்கி அடுக்க வேண்டும். கடை ஊழியர்களை வைத்தே இறக்கக்கூடாது.
மேலும், ஒவ்வொரு பெட்டியையும் ஸ்கேன் செய்து, உள்ளே இருக்கும் பாட்டில்களை எண்ணிப் பார்த்து, பணியாளர்கள் பாட்டில்களை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடைந்த பாட்டில்களை உடனடியாகக் கண்டுபிடிக்க முடியும்.
புதிய நடைமுறையால் என்ன பயன்?
இந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் பாட்டில்கள் உடைவதைத் தடுக்க முடியும். உடைந்த பாட்டில்களின் சரியான எண்ணிக்கையையும் கணக்கில் வைத்துக்கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, தொழிலாளர்களிடம் கடை ஊழியர்கள் பணம் கேட்டு தகராறு செய்வதையும் தடுக்க முடியும்.
மதுரையில் தொடங்கப்பட்டுள்ள இந்த நடைமுறை விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள 5,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
