சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 5 ஏ தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக அரசு பணியில் உள்ள இளநிலை உதவியாளர்கள் தலைமைச் செயலகத்தில் உதவி பிரிவு அலுவலர் மற்றும் உதவியாளர் பணிகளில் சேர்வதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-5ஏ தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் உதவி பிரிவு அலுவலர், உதவியாளர் பதவிகளில் 32 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு குரூப்-5 ஏ தேர்வு கடந்த 2025-ம் ஆண்டு டிச.21-ம் தேதி நடைபெற்றது. விரிவாக விடையளிக்கும் வகையில் நடத்தப்பட்ட இத்தேர்வை 406 பேர் எழுதினர்.
இந்நிலையில் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்களை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) அறிந்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி செயலாளரும், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலருமான (பொறுப்பு) பானோத் ம்ருகேந்தர் லால் தெரிவித்துள்ளார்.
