டிரம்பின் அமைதி வாரியத்தின் முதல் கூட்டம்; பார்வையாளராக பங்கேற்றது இந்தியா

வாஷிங்டன்: காசாவை நிர்வகிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அமைதி வாரியத்தின் முதல் கூட்டத்தில், இந்தியா பார்வையாளராக மட்டுமே பங்கேற்றது. இந்த வாரியத்தில் முழுநேர உறுப்பினராக இணைய இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

2 ஆண்டுகளாக நீடித்து வந்த மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையிலான மோதல், அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சியால் கடந்தாண்டு அக்டோபர் மாதம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. போருக்கு பிறகு காசாவை நிர்வகிக்க அதிபர் டிரம்ப், ஒரு அமைதி வாரியத்தை உருவாக்கினார். இதன் தலைவராக அவரே செயல்படுகிறார்.

கத்தார், சவுதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட பல்வேறு நாடுகள் உறுப்பினர்களாக இருக்கும் நிலையில், இந்தியா, இத்தாலி, உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இந்த அழைப்பை ஏற்று அமைதி வாரியத்தில் இந்தியா சேரவில்லை.

இந்த சூழலில், அதிபர் டிரம்ப் தலைமையிலான அமைதி வாரியத்தின் முதல் கூட்டம் நேற்று நடந்தது. இதில், 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். கடந்த ஒரு வாரமாக டிரம்ப் அழைப்பு குறித்து பரிசீலனை செய்து வரும் இந்தியா, இந்தக் கூட்டத்தில் பார்வையாளராக கலந்து கொண்டது. அமெரிக்காவின் இந்திய தூதரக பொறுப்பு அதிகாரி நம்கியா சி.கம்பா பங்கேற்றார்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘ அமைதி வாரியத்தில் இந்தியா முழுநேர உறுப்பினராவதற்கு தயாராக இல்லாவிட்டாலும், அதனுடன் இணைந்து செயல்படத் தயாராக இருக்கிறது. மேற்கு ஆசியாவில் அமைதியை ஊக்குவிக்கும் முயற்சிகளுக்கு இந்தியா எப்போதும் ஆதரவளித்து வருவகிறது,’ என்றனர்.

Source link