நமது டில்லி நிருபர்
டில்லி அருகே உள்ள குருகிராமில், 12 தனியார் பள்ளிகளுக்கு, இ – மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த இடங்களுக்கு அனுப்பப்பட்ட போலீஸ் குழு நடத்திய சோதனையில், அது வெறும் புரளி என அறிவிக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாக, அடையாளம் கண்டுபிடிக்க முடியாத இ – மெயில் முகவரியில் இருந்து டில்லி, ஹரியானா, பஞ்சாப், மாநிலங்கள் மற்றும் சண்டிகர் நகர பள்ளிகளுக்கு, வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல்கள் வந்தன.
அதையடுத்து, அந்த பள்ளிகளுக்கு சென்ற போலீசார் மற்றும் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் நிபுணர் குழுவினர் நடத்திய சோதனையில், அவர்களுக்கு வந்த தகவல் புரளி என தெரிந்தது. அது போல இன்றும், குருகிராம் பகுதியில் உள்ள 12 பள்ளிகளுக்கு ஒரே சமயத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
அதையடுத்து, அந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வெடிகுண்டுகளை செயல் இழக்கச் செய்யும் குழுவினர், சல்லடை போட்டு தேடியும், வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.இதையடுத்து, ‘அந்த பள்ளிகளில் வெடிகுண்டுகள் எதுவும் வைக்கப்படவில்லை; குழப்பம் ஏற்படுத்துவதற்காக வந்தன இ – மெயில் தகவல்கள்’ என அறிவிக்கப்பட்டது.
