டில்லியில் இன்று மத்திய அரசின் அனைத்து கட்சி கூட்டம்! மேற்காசிய நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை

– நமது டில்லி நிருபர் –

மேற்காசிய போர் பதற்றம் மற்றும் அதன் தாக்கம் குறித்து விவாதிக்க, டில்லியில் இன்று, அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

மேற்காசிய நாடான ஈரான் மீது, அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, பிப்., 28 முதல் கூட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு ஈரானும் பதிலடி கொடுப்பதால், மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவுகிறது.

அமெரிக்காவின் தாக்குதலால் கடுப்பான ஈரான், உலகின், 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இதனால், நம் நாடு உட்பட உலகளவில், எரிவாயு, கச்சா எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இது குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டும்படி, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

விளக்கம்

இந்நிலையில், மேற்காசிய போர் பதற்றம் மற்றும் அதன் தாக்கம் குறித்து விவாதிக்க, தலைநகர் டில்லியில் இன்று மாலை, 5:00 மணி அளவில், மத்திய அரசு சார்பில், அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்கும்படி, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்துக்கு, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் தலைமை வகிக்கிறார். மேலும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பார்லி., விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

கூட்டத்தில், மேற்காசிய போர் சூழல், அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு, அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், கச்சா எண்ணெய் கையிருப்பு, சமையல் காஸ் கை யிருப்பு உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க உள்ளது.

‘டீம் இந்தியா’

இதற்கிடையே, மேற்காசிய நிலவரம் தொடர்பாக, ராஜ்யசபாவில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: மேற்காசிய மோதல் கவலை அளிக்கிறது. அங்குள்ள உற்பத்தி தளங்கள் மீதான தாக்குதலை கண்டிக்கிறோம். முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு உள்ளதால், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிசக்தி வினியோகத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பதே அரசின் முன்னுரிமை.

எங்கெல்லாம் முடியுமோ அங்கிருந்தெல்லாம் எண்ணெய் மற்றும் எரிவாயு வினியோகத்தை உறுதி செய்து வருகிறோம். கடந்த சில நாட்களில், பல நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் சமையல் காஸ் ஏற்றிய கப்பல்கள் நம் நாட்டுக்கு வந்துள்ளன. மேலும் பல கப்பல்கள் வரவுள்ளன.

நெருக்கடியான இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கொரோனா தொற்றை எதிர்கொண்டது போல இதையும் எதிர்கொள்ள வேண்டும்.

தொடர்ச்சியாக வினியோகம் செய்ய போதுமான கச்சா எண்ணெய் இருக்கிறது. அதே சமயம், நெருக்கடியான தற்போதைய சூழ்நிலையில், அனைத்து மாநில அரசுகளும், ‘டீம் இந்தியா’வாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

அதிகார குழுக்கள்

வினியோகத் தொடர், பெட்ரோல், டீசல், உரங்கள், எரிவாயு, பணவீக்கம் உள்ளிட்ட விவகாரங்களில் போர் ஏற்படுத்தும் தாக்கங்களை கையாள, ஏழு புதிய அதிகார குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

வரவிருக்கும் சாகுபடி பருவத்தில், விவசாயிகளுக்கு உரத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெருக்கடி நிலையிலும், நாட்டின் வளர்ச்சி இயந்திரத்தை தொடர்ந்து இயங்க வைக்க மாநில அரசுகள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ராகுல் பங்கேற்க மாட்டார்

டில்லியில் நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில், காங்கிரசை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பங்கேற்க மாட்டார் என, கூறப்படுகிறது. ஏப்., 9ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள கேரளாவில், ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வேண்டும் என்பதால், அவர் பங்கேற்க மாட்டார் என, தெரிகிறது. தேசிய முக்கியத்துவம் மற்றும் நாட்டு மக்கள் நலன் சார்ந்த விவகாரம் தொடர்பான கூட்டத்தை ராகுல் புறக்கணிப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

Source link