லக்னோ: லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் டில்லி அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வருடம் தோறும் கிரிக்கெட் லீக் தொடர் நடக்கிறது. நேற்று லக்னோவில் நடந்த போட்டியில் அக்சர் படேல் தலைமையிலான டில்லி அணி, ரிஷாப் பன்ட் கேப்டனாக உள்ள லக்னோ அணியை எதிர்கொண்டது. ‘டாஸ்’ வென்ற அக்சர் படேல், பீல்டிங் தேர்வு செய்தார்.
ரிஷாப் ‘ஷாக்’
லக்னோ அணிக்கு ரிஷாப் பன்ட், மிட்சல் மார்ஷ் ஜோடி சுமார் துவக்கம் கொடுத்தது. முகேஷ் வீசிய முதல் ஓவரில் ரிஷாப் ஒரு பவுண்டரி அடித்தார். நிகிடி வீசிய அடுத்த ஓவரில் மார்ஷ், 2 பவுண்டரி விளாசினார். 3வது ஓவரில் கடைசி பந்தை வீசினார் முகேஷ். பந்தை எதிர்கொண்ட மார்ஷ், நேராக அடித்தார். இதற்குள் எதிர் முனையில் இருந்த ரிஷாப், ரன் எடுக்க கிரீசை விட்டு வெளியேறினார். துரதிருஷ்டவசமாக பந்து, முகேஷ் கையில் பட்டு, ஸ்டம்சை தகர்க்க, ரிஷாப் (7) சோகத்துடன் திரும்பினார்.
நடராஜன் நம்பிக்கை
அடுத்து மார்க்ரம், அக்சர் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். மறுபக்கம் முகேஷ் பந்தில் இப்போட்டியின் முதல் சிக்சர் அடித்தார் மார்ஷ். அக்சர் பந்தை தன் பங்கிற்கு சிக்சருக்கு விரட்டிய மார்க்ரம் (11), அவரது சுழலில் சிக்கி, போல்டானார். வேகத்தில் அசத்திய நடராஜன் (தமிழகம்), தனது முதல் ஓவரில், ஆயுஷ் படோனியை ‘டக்’ அவுட்டாக்கி அனுப்பி வைத்தார்.
மார்ஷ் ஆறுதல்
மார்ஷுடன் இணைந்தார் நிக்கோலஸ் பூரன். குல்தீப் பந்தில் ஒரு பவுண்டரி மட்டும் அடித்த திருப்தியுடன் பெவிலியன் திரும்பினார் பூரன் (8). ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும், மறுபக்கம் நிகிடி, குல்தீப் பந்துகளில் தலா ஒரு சிக்சர் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்த போராடினார் மார்ஷ். இவர், 28 பந்தில் 35 ரன் மட்டும் எடுத்த நிலையில், குல்தீப் ‘சுழல்’ வலையில் சிக்கினார்.
குல்தீப் அபாரம்
முகுல் சவுத்ரி, வந்த வேகத்தில் குல்தீப் ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரி அடித்தார். மீண்டும் பந்தை சுழற்றிய குல்தீப், இம்முறை முகுலை (14), ‘கேட்ச்’ செய்து வெளியேற்றினார். லக்னோ அணி 14 ஓவரில் 108/6 ரன் என தள்ளாடியது. நடராஜன் வீசிய போட்டியின் 15வது ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி என தொடர்ந்து விளாசினார் அப்துல் சமத்.
18 ஓவரை வீசினார் நடராஜன். இதன் 3வது பந்தில் அப்துல் சமத் (36 ரன், 25 பந்து) அவுட்டானார். கடைசி பந்தில் முகமது ஷமி (1) வெளியேறினார். நிகிடி வீசிய 19வது ஓவரின் 3, 4வது பந்துகளில் நோர்க்யா, மோசின் கான் என இருவரும் ‘டக்’ அவுட்டாகினர். லக்னோ அணி 18.4 ஓவரில் 141 ரன்னில் ஆல் அவுட்டானது. டில்லி சார்பில், நடராஜன், நிகிடி தலா 3, குல்தீப் 2 விக்கெட் சாய்த்தனர்.
சரிந்தது ‘டாப்’
எளிய இலக்கைத் துரத்திய டில்லி அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முகமது ஷமி வீசிய முதல் பந்தில் ராகுல், ‘டக்’ அவுட்டானார். நிதிஷ் ராணா (15), நிசங்கா (1) நிலைக்கவில்லை. அக்சர் படேல் ‘டக்’ அவுட்டாக, டில்லி அணி 26/4 ரன் என திணறியது. சமீர் ரிஸ்வி, ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்து அணியை மீட்க முயற்சித்தனர்.
ரிஸ்வி 37 பந்தில் அரைசதம் கடந்தார். இவர்களது துணிச்சலான ஆட்டம் கைகொடுக்க, டில்லி பக்கம் வெற்றி திரும்பியது.
டில்லி அணி 17.1 ஓவரில் 145/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது. 5வது விக்கெட்டுக்கு 119 ரன் எடுத்த ரிஸ்வி (70), ஸ்டப்ஸ் (39) ஜோடி அவுட்டாகாமல் இருந்தது.
