புதுடில்லி:டில்லி குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் இரண்டு பயங்கரவாதிகளை என்ஐஏ அமைப்பினர் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இந்த சம்பவத்தில் மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தலைநகர் டில்லி செங்கோட்டை அருகே கடந்தாண்டு நவ.10ம் தேதி குண்டுவெடித்தது. இந்த தாக்குதலில் மொத்தம் 11 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் சம்பந்தமாக அடில் ரத்தீர், முசுமில் கனி உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். முக்கிய குற்றவாளியான உமர் உன் நபி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டான்.
இந் நிலையில் இந்த சம்பவத்தில் மேலும் 2 பேரை என்ஐஏ அமைப்பினர் கைது செய்துள்ளனர். இருவரின் பெயர்களும் முறையே ஜமீர் அகமது அஹ்ங்கர் மற்றும் துபைல் அகமது பட் ஆகும். டில்லி குண்டுவெடிப்பின்போது முக்கிய குற்றவாளிக்கு இவர்கள் இருவரும் ஆயுதங்களை வழங்கி உள்ளனர். இவர்கள் இருவரும் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் (AGH) என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
ஜம்மு காஷ்மீர், ஹரியானா போலீசார் மற்றும் புலனாய்வு அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு நடத்திய விசாரணைகளில், ஜமீர் மற்றும் துபைல் குண்டுவெடிப்பு சதியில் ஈடுபட்டது மற்றும் பல்வேறு பயங்கரவாத சதித்திட்டங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
மேலும் பயங்கரவாத செயல்களுக்காக ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை சேகரிப்பதில் ஈடுபட்டிருந்தும் என்ஐஏ விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
