— டில்லி சிறப்பு நிருபர் –
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என, 2018ல் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு வழக்கை விசாரித்த மற்றொரு அமர்வு, பாலின சமத்துவம் குறித்த பிரச்னை அனைத்து மதங்களிலும் இருப்பதால், ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது.
இதையடுத்து, சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு விசாரணை, கடந்த இரு நாட்களாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நேற்று மீண்டும் ஆஜராகி வாதாடினார். அப்போது, மத நடைமுறைகளில் எது மூடநம்பிக்கை என்பதை தீர்மானிக்கும் அதிகாரம், உச்ச நீதிமன்றத்திற்கு இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதை மறுத்து துஷார் மேத்தா பல்வேறு விவகாரங்களை மேற்கோள் காட்டியதால், நீதிபதிகளுக்கும் அவருக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்தது.
துஷார் மேத்தா முன்வைத்த வாதம்:
மூட நம்பிக்கை நிலவுகிறது என வைத்துக் கொள்வோம். அதை நீதிமன்றம் எப்படி தீர்மானிக்கும். அரசியல் சாசன பிரிவு 25பி-யின் கீழ், மூடநம்பிக்கைகளை தடுக்க சீர்திருத்த சட்டத்தை கொண்டு வரும் கடமை சட்டசபைகளுக்கே இருக்கிறது. சட்டசபை மட்டுமே எது மூட நம்பிக்கை என்பதை தீர்மானிக்க முடியும்.
சட்டத்தில் மட்டுமே மதச்சார்பற்ற நீதிமன்றங்கள், நிபுணத்துவம் கொண்டவை. மதத்தில் அல்ல. நாகாலாந்தில் மத முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயம், எனக்கு மூடநம்பிக்கையாக தோன்றும். பன்முக தன்மை கொண்ட சமூகத்தில் எது மூடநம்பிக்கை என்பது வரையறுப்பது கடினம்.
திருமணத்தை மீறிய உறவு வைத்திருப்பதை தனிமனித உரிமை என, நீதிமன்றம் அங்கீகரிக்கிறது. ஆனால், தனி மனித சமூகம் அதை தவறாக கருதுகிறது. சபரிமலை விவகாரத்திலும் அரசியல் சாசன நெறி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. சமூகத்தின் நீண்டகால நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்க தவறுவது, மத சுதந்திரத்தை பாதிக்கும் செயல்.
இவ்வாறு அவர் வாதாடினார்.
இவ்வழக்கு விசாரணை இன்றும் தொடர்கிறது.
