– டில்லி சிறப்பு நிருபர் -:
டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இருந்து, முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரை விடுவித்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், சி.பி.ஐ-.,க்கு எதிராக தெரிவிக்கப்பட்டிருந்த விமர்சனங்களுக்கு டில்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
டில்லியில் முதல்வர் ரேகா குப்தா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
குற்றச்சாட்டு
இங்கு, 2015 – 24 வரை ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவி வகித்தார். அவரது கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா, 2015 – 23 வரை துணை முதல்வராக இருந்தார்.
கடந்த 2021ல், ஆம் ஆத்மி ஆட்சியில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதில், 100 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, புதிய கொள்கை ரத்து செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவால் ஆறு மாதமும், மணீஷ் சிசோடியா இரு ஆண்டுகளும் டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரும் ஜாமினில் வெளியே வந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம், சி.பி.ஐ., குற்றப்பத்திரிகையை ஏற்க மறுத்து, போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா உட்பட 23 பேரை, சமீபத்தில் விடுவித்தது.
மேலும், ‘சி.பி.ஐ.,-யின் வாதங்கள் நிரூபிக்க முடியாதவை; பொருளாதார ரீதியாக அறிவற்றவை; சட்டப்படி செல்லுபடியாகாதவை.
‘இதை விசாரித்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரை விடுவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ., மேல்முறையீடு செய்தது. இந்த மனு, நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டதாவது:
விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு குற்றவியல் சட்டத்தையே தலைகீழாக மாற்றிவிட்டது. முறையான விசாரணை நடத்தாமலேயே குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்திருப்பது தவறு. இது சமீபத்திய காலங்களில் நடந்த மிகப்பெரிய ஊழல் வழக்குகளில் ஒன்று.
முறைகேடாக மதுபான கொள்கையை வடிவமைக்க லஞ்சம் கைமாறியதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. போதிய ஆதாரங்கள் இருந்தும், அதை புறக்கணித்து விட்டு, சி.பி.ஐ., மீது தேவையற்ற விமர்சனங்களை விசாரணை நீதிமன்றம் முன்வைத்துள்ளது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதை பதிவு செய்த அமர்வு, சி.பி.ஐ., மற்றும் அதன் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நீதிமன்றம் தெரிவித்த எதிர்மறையான கருத்துகள் மற்றும் விமர்சனங்களுக்கு இடைக்கால தடை விதித்தது.
எதிர்பார்ப்பு
அதே சமயம், அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோ டியா உள்ளிட்ட, 23 பேரையும் விடுவித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்தது.
இந்த மேல்முறையீடு குறித்து பதிலளிக்கும்படி, அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட, 23 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட அமர்வு, வழக்கை வரும் 16-க்கு ஒத்தி வைத்தது.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை விசாரித்து வரும் பண மோசடி வழக்கை ஒத்திவைக்கும்படி, விசாரணை நீதிமன்றத்திற்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிடலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
