-டில்லி சிறப்பு நிருபர்-
தேவையற்ற வழக்குகளை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக, மத்திய அரசுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சி.ஐ.எஸ்.எப்., எனப்படும், மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ் ஒருவர், உரிய அனுமதியின்றி 11 நாட்கள் பணிக்கு வராத காரணத்திற்காகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவர் பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த தண்டனை மிகவும் கடுமையானது எனக் கூறி அவரது பணிநீக்கத்தை ரத்து செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் கூறியதாவது:
நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளுக்கு மிகப்பெரிய காரணமாக மத்திய அரசு இருக்கிறது. இது குறித்து நாங்கள் பலமுறை கவலை தெரிவித்துவிட்டோம். ஆனாலும் மத்திய அரசு தொடர்ந்து இப்படியான வழக்குகளை தாக்கல் செய்து கொண்டே தான் இருக்கிறது. 11 நாட்கள் விடுப்பு எடுத்ததற்காகப் பணிநீக்கம் செய்வது அநீதி என்று உயர் நீதிமன்றம் தெளிவாகக் கூறி உள்ளது.
அப்படி இருந்தும் மத்திய அரசு ஏன் உச்ச நீதிமன்றத்தை அணுகியது என்பது புரியவில்லை. அரசு அதிகாரிகள் ஒரு வழக்கில் மேல்முறையீடு செய்யாமல் சமரசம் செய்துகொண்டால், அவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்ற பயம் உள்ளது. இதன் காரணமாகவே தேவையற்ற மேல்முறையீடுகள் வழக்கமாகிவிட்டன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும், மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தேவையற்ற இந்த வழக்கை தாக்கல் செய்ததற்காக 25,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
