– டில்லி சிறப்பு நிருபர் –
தேர்தல் பணிக்காக சென்ற ஏழு நீதிபதிகளை ஒரு கும்பல் பிடித்து வைத்து துன்புறுத்தியதற்கு, உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ‘இந்த சம்பவம், மம்தா அரசின் தோல்வியை காட்டுகிறது; எங்கள் அதிகாரத்துக்கு சவால் விடுவதாக தெரிகிறது’ என நீதிபதிகள் காட்டமாக கூறினர்.
மேற்கு வங்கத்தில் ஏப். 23, 29 தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இறுதி வாக்காளர் பட்டியலில் 60 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. இதற்கு, முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.
உருட்டுக்கட்டை:
60 லட்சம் பேரின் விண்ணப்பங்களை கொல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்து இறுதி முடிவு எடுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதுவரை 47 லட்சம் பேரின் ஆட்சேபனைக்கு தீர்வு காணப்பட்டது. எஞ்சிய வாக்காளர்களின் பெயர்களை சேர்ப்பதற்கான பணிகளும் நடக்கின்றன.
இந்நிலையில், மால்டாவில் சிறப்பு ஆய்வு பணிக்காக சென்ற ஏழு நீதிபதிகளை ஒரு கும்பல் சிறைபிடித்து வைத்த சம்பவம், அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. மாலை 3:30 மணிக்கு ஏழு நீதிபதிகளும் தேர்தல் பணிக்காக சென்றபோது கும்பல் ஒன்று உருட்டு கட்டை, தடி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அவர்களை முற்றுகையிட்டது.
உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர், உடனே மாநில அரசுக்கு தெரிவித்தார். ஆனால், போலீஸ் வரவில்லை. உள்துறை செயலர், மாநில போலீஸ் டி.ஜி.பி., ஆகியோரிடம் பதிவாளர் உதவி கேட்டார்.
ஆனால், அவர்கள் வாக்குறுதி மட்டுமே கொடுத்தனர்; நீதிபதிகளை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஒன்பது மணி நேரம் உணவோ, குடிநீர் அருந்தவோ நீதிபதிகளை அந்த கும்பல் அனுமதிக்கவில்லை.
அதிர்ச்சி:
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலையிட்டு, உள்துறை செயலர் மற்றும் டி.ஜி.பி.யிடம் பேசிய பின், நள்ளிரவில் ஏழு நீதிபதிகளும் மீட்கப்பட்டனர். அப்போதும் கும்பல் நீதிபதிகளின் வாகனங்களை தாக்கியது.
ஒன்பது மணி நேரமாக உணவு, குடிநீர் வழங்காமல் மூன்று பெண்கள் மற்றும் 5 வயது குழந்தை உட்பட ஏழு நீதிபதிகளை ஒரு கும்பல் கொடுமைப்படுத்தி இருப்பதாக கூறி, கொல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உச்ச நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதினார்.
அதன் அடிப்படையில், இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால் பக்சி மற்றும் விபுல் பஞ்சோலி அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது.
நீதிபதிகள் கூறியதாவது: நீதித்துறை அதிகாரிகளை மிரட்டுவதற்காக எடுக்கப்பட்ட துணிகர முயற்சி இது. மாலை 5:00 முதல் இரவு 11:00 மணி வரை மால்டா கலெக்டர் எங்கே சென்றார்? தலைமை செயலரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
போராட்டம்:
மாநில நிர்வாகம் முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது. இது தற்செயலான நிகழ்வு அல்ல; நீதிபதிகளை மனரீதியாக பலவீனப்படுத்த திட்டமிட்ட ரீதியில் நடத்தப்பட்ட தாக்குதல். எஸ்.ஐ.ஆர்., நடைமுறைகள் தொடர்பான பணிகளில் நாங்கள் கேட்டுக் கொண்டதால், நீதிபதிகள் அந்த கடமையை செய்கின்றனர். அவர்கள், உச்ச நீதிமன்றத்தின் கரங்கள். இந்த சம்பவம், நீதிபதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சி மட்டுமல்ல; உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கே விடப்பட்ட சவால்.
இந்த போராட்டம் அரசியல் ரீதியானது என்றால், அரசியல் கட்சித் தலைவர்கள் அந்த இடத்திற்கு வராமல் என்ன செய்து கொண்டிருந்தனர். யாரோ ஒருவர் சட்டத்தை கையில் எடுக்க முயற்சி செய்துள்ளார். மாலை 5:00 மணிக்கு துவங்கிய சிறைபிடிப்பு போராட்டம் இரவு 11:00 மணி வரை நீண்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, சி.பி.ஐ., அல்லது என்.ஐ.ஏ.,வை தேர்தல் கமிஷன் நியமிக்க வேண்டும்.
விசாரணை:
மேற்கு வங்க அரசின் அனைத்து உயரதிகாரிகளும் 6ம் தேதி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும். முதல்வர் மம்தா பானர்ஜி சார்பிலும் ஒருவர் இடம் பெற வேண்டும்.
துரதிருஷ்டவசமாக மேற்கு வங்கத்தில் அனைத்து விவகாரமும் அரசியலாக்கப்படுகிறது. இப்படிப்பட்ட மோசமான மாநிலத்தை பார்த்ததே இல்லை. மக்களிடையே பிரிவினையை துாண்டும் மாநிலமாக மாறிவிட்டது.
நீதிபதிகளை சிறைபிடித்த சமூக விரோதிகள் யார் என்பது எங்களுக்கு தெரியாது என நினைத்து விட்டீர்களா? விடிய விடிய இரண்டு மணி வரை அங்கு நடந்ததை பார்த்துக் கொண்டு தான் இருந்தோம். இந்த சம்பவம் மிக மிக துரதிருஷ்டவசமானது.
இந்த சம்பவத்தால், மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர்., நடைமுறைகள் நின்றுவிடக் கூடாது. உச்ச நீதிமன்றம் நியமித்த 700 நீதித்துறை அலுவலர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
பாதுகாப்பு
நீதிபதிகளின் வீடுகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் துணை ராணுவப் படையை பாதுகாப்புக்காக நியமிக்க வேண்டும். தேர்தல் பணிக்காக நீதிபதிகள் செல்லும்போது, ஐந்து நபர்களுக்கு மேல், அவர்கள் அருகே செல்ல விடாமல் தேர்தல் கமிஷன் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
