– டில்லி சிறப்பு நிருபர் –
பா.ம.க.,வின் மாம்பழம் சின்னம் யாருக்கு என்பதை, சிவில் நீதிமன்றம் மூன்று நாட்களுக்குள் விசாரணை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பா.ம.க.,வில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், அன்புமணி தரப்புக்கு, கட்சியின் மாம்பழம் சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கி கடிதம் அனுப்பியது. கடிதத்தை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘உட்கட்சி பிரச்னை தீரும் வரை, தேர்தலை தள்ளி வைக்க முடியாது. இது போன்ற மனுக்களால், நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம்’ என தீர்ப்பளித்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் ராமதாஸ் மேல்முறையீடு செய்தார்.
அந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் விகாஸ் சிங், ”கட்சி யாருக்கு என்ற முடிவு தெரியும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்க வேண்டும். மேலும், டில்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷனும் இது போன்று தெரிவித்துள்ளது,” என்றார்.
இதையடுத்து, அன்புமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மீனாட்சி அரோரா, ”அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி என்பதால், தேர்தல் கமிஷன் எந்த முடிவும் எடுக்க முடியாது. அதனால், ஆவணங்களின் அடிப்படையில் முடிவு எடுக்குமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதன் அடிப்படையில், எங்களுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது,” என வாதிட்டார்.
அதை கடுமையாக எதிர்த்த ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர், ‘கட்சிக்குள் உரிமை கோரல் பிரச்னை ஏற்பட்டால், சின்னத்தை யாருக்கும் ஒதுக்காமல் முடக்கி வைக்க வேண்டும் என்பது தேர்தல் கமிஷனின் அடிப்படை விதிமுறை. ஆனால், அதை செய்யாமல் ஒரு தரப்புக்கு சின்னத்தை ஒதுக்கியுள்ளது’ என வாதிட்டார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், ”சின்னம் முடக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் தெரிவித்ததை சுட்டிக்காட்டியதோடு, அன்புமணி தரப்புக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியது யார்,” எனவும் கேள்வி எழுப்பினார். அதற்கு, தேர்தல் கமிஷனில் உள்ள ஆவணங்கள் அடிப்படையில், தங்கள் தரப்பிடம் சின்னம் உள்ளதாக தெரிவித்தனர்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்ற அமர்வு, மாம்பழம் சின்னம் தொடர்பாக, சிவில் நீதிமன்றத்தில் நாளைக்குள் மனு தாக்கல் செய்யுமாறு ராமதாஸ் தரப்புக்கு உத்தரவிட்டது.
மேலும், ‘இந்த விவகாரத்தில், இரு தரப்பு வாதங்களையும் விரிவாக கேட்டு, அதன் அடிப்படையில் சட்டத்திற்கு உட்பட்டு, அடுத்த மூன்று நாட்களுக்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும்’ என, சிவில் நீதிமன்றத்திற்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
