– டில்லி சிறப்பு நிருபர் –
‘வாக்காளர் பட்டியல் புகார்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதிகளை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது. அவர்களின் நம்பகத்தன்மையை எப்படி சந்தேகிக்கலாம்? நீதிபதிகளை கேள்வி கேட்கும் துணிச்சலை யார் கொடுத்தது?’ என, மேற்கு வங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
மேற்கு வங்கத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், 63 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதற்கு முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. மேலும், மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் தரப்பிலும் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய அமர்வு, இந்த மனுக்களை விசாரித்து அவ்வப்போது இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. வாக்காளர் பட்டியல் புகார்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் நியமித்த நீதித்துறை அலுவலர்களை சந்தேகித்தும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நேற்று ஒன்றாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
அப்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் ஜாய்மால்யா பாக்சி அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
வாக்காளர் பட்டியல் புகார்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதிகளை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது. அவர்களின் நம்பகத்தன்மையை எப்படி சந்தேகிக்கலாம்? நீதிபதிகளை கேள்வி கேட்கும் துணிச்சலை யார் கொடுத்தது? இப்படியான மனுக்களை உச்ச நீதிமன்றம் ஒருபோதும் ஏற்காது. சகித்துக் கொள்ளவும் முடியாது.
கொல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சமர்ப்பித்த அறிக்கையின்படி, கடந்த 9ம் தேதி மாலை வரை, 10.16 லட்சம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இந்தப் பணி விரைவாக நடக்க தேர்தல் கமிஷன் மேற்கொண்டு, கட்டாய விதிகள் எதையும் அறிமுகப்படுத்தக் கூடாது. ஒருவேளை அறிமுகப்படுத்த வேண்டுமெனில், கொல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் முன் அனுமதி பெற வேண்டும்.
நீதித்துறை அலுவலர்களால் நிராகரிக்கப்படும் மனுதாரர்கள் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, கொல்கட்டா உயர் நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட தனி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அமைத்துக் கொள்ளலாம்.
நீதித்துறை அலுவலர்கள் எடுக்கும் முடிவுகளில், தேர்தல் கமிஷனின் எந்தவொரு நிர்வாக அதிகாரியும் தலையிட அனுமதி இல்லை. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
