– டில்லி சிறப்பு நிருபர் –
‘நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சம உரிமையை உறுதி செய்ய, யு.சி.சி., எனப்படும், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தான் ஒரே வழி’ என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு தெரிவித்துள்ளது.
முஸ்லிம் தனிநபர் ஷரியத் சட்டத்தில், பெண்களுக்கு வாரிசுரிமை மீறப்படுவதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவை, தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜாய்மால்யா பக்சி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதிடுகையில், ”இச்சட்டத்தின்படி, ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சொத்துரிமைகளில் பாகுபாடு இருக்கிறது. குறிப்பாக, பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்படுகிறது,” என்றார்.
சரியான பதில்
அப்போது, தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறியதாவது: முஸ்லிம் சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு சமமான வாரிசுரிமை மறுக்கப்படுவது உண்மை தான். ஒருவேளை ஷரியத் சட்டத்தின் வாரிசுரிமை விதிகள் ரத்து செய்யப்பட்டால், அதற்கு பதிலாக எந்த சட்டம் வாரிசுரி மையை நிர்வகிக்கும்?
இதற்கு சரியான பதில், பொது சிவில் சட்டம் தான். நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சம உரிமையை உறுதி செய்ய, நாடு முழுதும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது தான் ஒரே வழி. நீதிமன்றங்கள் சட்டங்களை ரத்து செய்வதை காட்டிலும், பார்லி., ஒரு பொதுவான சட்டத்தை கொண்டு வருவதே குழப்பங்களை தவிர்க்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
நீதிபதி ஜாய்மால்யா பாக்சி கூறுகையில், ”தற்போதைய தனிநபர் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்தால், வாரிசுரிமை விவகாரங்களில் ஒரு சட்ட வெற்றிடம் ஏற்படும். இது, பெண்களுக்கு தற்போது கிடைக்கும் சிறிய அளவிலான உரிமைகளை கூட பறித்து விடும்.
”தனிநபர் சட்டத்தை செல்லாது என அறிவிப்பது, தேவையற்ற குழப்பத்தை தான் ஏற்படுத்தும். அதற்கு பதில், அரசு கொள்கையின்படி பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை பார்லி., வாயிலாக மேற்கொள்வது சிறந்ததாக இருக்கும்,” என்றார்.
சிவில் உரிமை
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், ”வாரிசுரிமை என்பது ஒரு சிவில் உரிமை. அது மதச்சடங்கு கிடையாது. எனவே, முஸ்லிம் பெண்களுக்கும், ஆண்களுக்கு நிகரான சம உரிமை வழங்கப்பட வேண்டும்,” என, மீ ண்டும் வாதிட்டார்.
மேலும், ”இதற்காக இந்திய வாரிசுரிமை சட்டம் போன்றவற்றை அமல்படுத்தலாம். ஏற்கனவே, சராயா பானு வழக்கில், ‘முத்தலாக்’ நடைமுறையை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, அதன்படி இந்த விவகாரத்தில் நீதிமன்றமே தலையிடலாம்,” என, அவர் வாதங்களை முன்வைத்தார்.
தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி சூர்யகாந்த், ”தனிநபர் சட்டங்களை அங்கீகரிக்கும், 1937 சட்டத்தை நாங்கள் ரத்து செய்கிறோம் என்றே வைத்துக் கொண்டாலும், அதன்பின் என்ன நடக்கும் என்பது தான் இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். ஆனால், அதற்கு பதில் கூறும் யோசனைகளை மனுவில் மனுதாரர் முன்வைக்கவில்லை,” என்றார்.
இதற்கு பதிலளித்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், ”சொத்துரிமை என்பது அத்தியாவசியமான மத நடைமுறை கிடையாது. மாறாக, அது ஒரு சிவில் உரிமை. எனவே, அவற்றில் நீதிமன்றங்களால் தலையிட முடியும். ‘முத்தலாக்’ போல மதத்துடன் பின்னிப்பிணைந்த விவகாரம் கிடையாது என்பதால், நிச்சயமாக நீதிமன்ற உத்தரவு மூலமே இருக்கக்கூடிய பாகுபாட்டை சரி செய்ய முடியும்,” என, வாதிட்டார்.
மேலும், நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில், மனுவை திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய அவர் அனுமதி கோரினார். இதற்கு அனுமதி வழங்கிய தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தது.
