– டில்லி சிறப்பு நிருபர் –
”ராமதாசின் வயோதிகம் காரணமாக, அவரை தவறாக வழிநடத்தி, உச்ச நீதிமன்றத்தில் அவர் பெயரில் போலியாக வழக்கு தொடர்ந்து உள்ளனர்,” என அன்புமணி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழ சின்னத்தை ஒதுக்கீடு செய்து, அன்புமணிக்கு இந்திய தலைமை தேர்தல் கமிஷன் கடிதம் எழுதி இருந்தது.
அன்புமணி போலியான ஆவணங்களை தாக்கல் செய்து கொடுத்த விண்ணப்பத்தை ஏற்று, தேர்தல் கமிஷன் இந்த முடிவை எடுத்திருக்கிறது. ‘அதனால், தேர்தல் கமிஷனின் முடிவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஏற்கனவே இதே கோரிக்கை தொடர்பான விவகாரம் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்றம், ராமதாசின் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் ராமதாஸ் மேல்முறையீடு செய்திருந்தார்; கூடவே, மாம்பழச் சின்னத்தை முடக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி சூரியகாந்த் மற்றும் நீதிபதி ஜாய் மாலியா பக் ஷி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அன்புமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மீனாட்சி அரோரா, ‘இந்த வழக்கில் விசாரிக்க வேண்டியது ஒன்றுமில்லை. வயதான காலத்தில் ராமதாசை, சிலர் தவறாக வழி நடத்தி, வழக்கு தொடுக்க வைத்துள்ளனர். தேர்தல் தேதி அறிவித்து விட்டதால், வழக்கை விசாரிக்க வேண்டியதில்லை. எனவே, தேர்தல் கமிஷனின் ஆவணத்தில் என்ன இருக்கிறதோ, அதையே நீதிமன்றம் எடுத்துக் கொண்டு, வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என கோரினார்.
அதை ஏற்ற நீதிபதிகள், ”தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், இந்த விவகாரத்திற்குள் செல்ல நீதிமன்றம் விரும்பவில்லை,” என கூறி வழக்கை தள்ளி வைத்தனர்.
