– டில்லி சிறப்பு நிருபர் -'சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரம் ஆணாதிக்கப் பிரச்னை அல்ல; மாறாக தனித்துவமான

– டில்லி சிறப்பு நிருபர் –

‘சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரம் ஆணாதிக்கப் பிரச்னை அல்ல; மாறாக தனித்துவமான சம்பிரதாயம் சார்ந்தது’ என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது. ‘அதே சமயம் கோவில்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் அனுமதிப்பதும், மற்றவர்களை தவிர்ப்பதும் ஹிந்து மதத்தை பலவீனப்படுத்தி, சமூகத்தை பிளவுப்படுத்தும்’ என, நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

அரசியல் சாசன அமர்வு

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களையும் அனுமதிக்கலாம் என 2018ல் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து 2019ல் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை விசாரித்த அன்றைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தை ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது.

இந்த அமர்வு சபரிமலை விவகாரத்தை மட்டும் அணுகாமல், மசூதிகளில் பெண்கள் அனுமதி, பார்சி பெண்கள் உரிமை போன்ற பொதுவான மத சுதந்திரம் தொடர்பான ஏழு கேள்விகளை ஆராய துவங்கியது.

இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, எம்.எம்.சுந்தரேஷ், அஹ்சானுதீன் அமானுல்லா, அரவிந்த் குமார், அகஸ்டின் ஜார்ஜ் மசி, பிரசன்னா பி வரலே, ஆர்.மகாதேவன் மற்றும் ஜாய்மால்யா பக்சி அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஆமோதிப்பு

மூன்றாவது நாளாக இன்று விசாரணை துவங்கியபோது, ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் அனுமதித்து, மற்றவர்களை விலக்கி வைப்பது சரியா என நீதிபதி பி.வி.நாகரத்னா கேள்வி எழுப்பினார்.

”கோவில்கள், மடங்களில் அனைவருக்கும் வழிபாட்டு உரிமை தர வேண்டும். ஒரு குறிப்பிட்ட பிரிவினரை அனுமதித்து, மற்றொரு பிரிவினரை புறந்தள்ளி பாகுபாடு காண்பிப்பது ஹிந்து மதத்தை பலவீனப்படுத்தும், சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தும்,” என்றார்.

நீதிபதி அரவிந்த் குமார் இந்த கருத்தை ஆமோதித்தார்.

அதற்கு பதில் அளித்து, மத்திய அரசு சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”சபரிமலை விவகாரத்தை ஆணாதிக்க கண்ணோட்டத்தில் அணுகக் கூடாது. நம் நாட்டில் பெண்கள் மட்டுமே வழிபடும் பகவதி கோவில் இருக்கிறது. அதே போல், ஆண்கள், பெண்களை போல வேடமணிந்து நேர்த்திக் கடன் செலுத்தும் சடங்குகள் என தனித்துவமான வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. ஆகவே, சபரிமலை கட்டுப்பாட்டை பாலின பாகுபாடாக கருத கூடாது.

”பக்தர் மற்றும் தெய்வத்தின் உரிமை பிரிக்க முடியாதவை. மத நடைமுறைகளை வெளிப்படையான சட்டங்களால் அணுகாமல், ஆழமான நம்பிக்கைகளின் அடிப்படையில் உற்று நோக்க வேண்டும்,” என்றார்.

சம்பிரதாயம்

இதற்கிடையே சம்பிரதாயம் என்றால் என்ன என்பதற்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விக்ரம்ஜித் பானர்ஜி சுவாரஸ்யமான வாதத்தை முன்வைத்தார், ”அரசியல் சாசன சட்டத்தின் ஹிந்தி மொழிபெயர்ப்பில் ஒழுக்கநெறி என்பது, ‘சதாச்சாரம்’ என குறிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ‘தொன்றுதொட்டு பின்பற்றப்படும் பழக்கம்’ என்பதாகும். எனவே, நவீன மேற்கத்திய ஒழுக்கநெறிகளை வைத்து, மத நம்பிக்கைகளை தீர்மானிக்காமல் சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்,” என்றார்.

மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதிட்டபோது, ”ஹிந்து மதத்தில் போப் போன்ற ஒற்றை தலைமை இல்லை. எனினும், ஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு செல்லும் எவரும் கிறிஸ்துவராகவோ, முஸ்லிமாகவோ இருந்தாலும், ஹிந்து தெய்வத்தின் மீதும், அந்த கோவிலில் கடைபிடிக்கப்படும் சம்பிரதாயத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்.

அதிகாரம் இல்லை

”சபரிமலை அய்யப்பனை தரிசிக்க ஒரு மண்டலம் விரதம் இருக்க வேண்டும் என்பது அத்தகைய சம்பிரதாயம் தான். சட்டப் பிரிவு 26 (பி)ன் கீழ் ஒரு மதப்பிரிவு தன் சமய விவகாரங்களை நிர்வகிக்க உரிமை தருகிறது. பிரிவு 25(2)(பி)ன் கீழ் வரும் சமூக சீர்திருத்த சட்டங்களுக்கு கட்டுப்பட்டது அல்ல. பிரிவு 25 என்பது தனிநபர் சார்ந்தது; பிரிவு 26 நிறுவனம் சார்ந்தது.

”எனவே கோவிலின் சம்பிரதாயத்தை மாற்ற யாருக்கும் உரிமை இல்லை; அதை ஏற்காதவர்கள் அந்த இடத்தை தவிர்க்கலாமே தவிர, நம்பிக்கையை மாற்றும்படி கோர முடியாது. சம்பிரதாயங்கள் பற்றி தீர்மானிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் கிடையாது,” என்றார்.

அவசியம்

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஜாய்மால்யா பக்சி, ‘‘பிரிவு 26 என்பது தனிநபர் உரிமைகளை விட, நிர்வாகத்தின் உரிமைகளை பாதுகாக்கவே முன்னுரிமை தருகிறது. இது சங்கத்தின் உரிமை போன்றது,” என தெரிவித்தார்.

மற்றொரு நீதிபதி அமானுல்லா, ”நம்பிக்கை சரி; ஆனால், அது மற்றவர்களின் உரிமைகளை பாதிக்கும்போது சட்டத்தின் தலையீடு அவசியம் தானே?” என கேள்வி எழுப்பினார்.

ஒத்திவைப்பு

இந்தச் சூழலில் தன் கருத்தை முன்வைத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், ”குருவாயூர் கோவிலில் சட்டை அணியாமல் செல்வதும், சீக்கியர்களின் பொற்கோவிலில் தலையை மூடி செல்வதும் அந்தந்த இடத்தின் மேலாண்மை மற்றும் நடைமுறை சார்ந்த விவகாரங்கள். பிரிவு 25 ‘சமய நடைமுறை’ பற்றி பேசுகிறது; பிரிவு 26 ‘சமய விவகாரங்கள்’ பற்றி பேசுகிறது. இவை இரண்டும் வெவ்வேறு தளங்கள் என குறிப்பிட்டார்.

இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் மற்ற தரப்பு வாதங்கள் தொடரும்.

Source link