டில்லி சென்று வந்த பிறகு பா.ஜ.,வை விஜய் விமர்சனம் செய்யாதது ஏன்? அ.தி.மு.க., 'மாஜி' கேள்வி

சென்னை:

‘த.வெ.க., தலைவர் விஜய், டில்லி சென்று வந்த பிறகு, பா.ஜ.,வை விமர்சனம் செய்யாததற்கு என்ன காரணம்?’ என ,அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் கூறினார்.

சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் தே.ஜ., கூட்டணிக்கு தலைமை அ.தி.மு.க., தான்; முதல்வர் வேட்பாளர் பழனி சாமிதா, என்பதை, மத்திய அமைச்சர் அமித் ஷா தெளிவாக சொல்லி விட்டார். எனவே, பா.ஜ.,வுக்கு நாங்கள் அடிமையாக இருக்க வேண்டிய அவ சியம் இல்லை. இதை, நடிகர் விஜயிடம் யாராவது போய் சொல்லுங்கள்.

கரூர் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு போகும் முன், ‘பொது எதிரி பா.ஜ., தான்’ என்றார் விஜய். ஆனால், டில்லி போய் விட்டு வந்த பின், தி.மு.க.,வையும் அ.தி.மு.க.,வையும் ஊழல் கட்சி என விமர்சிக்கிறார்; பா.ஜ.,வை விமர்சனம் செய்யாததற்கு என்ன காரணம்?

எங்களை ஊழல் கட்சி என சொல்லும் விஜய் என்ன உத்தமரா; அவர் சினிமாவில் வாங்கும் சம்பளம் கருப்பு பணமா, வெள்ளை பணமா? அவருடன் இருக்கும் ஆதவ் அர்ஜுனா, அவரது மாமனார் மார்ட்டின் எல்லோரும் நேர்மையாக சம்பாதித்து மேலே வந்தவர்களா?

செங்கோட்டையன் அ.தி.மு.க., அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறை சென்றார். ஜெயலலிதா தான் அவரை விடுதலை செய்தார். விஜய் முதலில் தன்னை நேர்மையானவர், ஊழலற்றவர் என நிரூபிக்கட்டும்.

நாங்கள் நேர்மையாக கட்சி நடத்துகிறோம். அதனால் தான், ‘தினமலர்’ நாளிதழ் கருத்து கணிப்பில், முதன்மையான இடத்துக்கு அ.தி.மு.க., வந்திருக்கிறது.

ஓட்டுரிமை இல்லாத சின்ன பிள்ளைகள்தான், விஜய் போட்டோவை கையில் வைத்துக் கொண்டு இருக்கின்றனர். ஓட்டுரிமை உள்ளவர்கள், அ.தி.மு.க.,வுக்கு தான் ஆதரவு கொடுப்பர். அ.தி.மு.க.,வின் கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link