டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட, 23 பேரை விடுவித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
டில்லியில், முதல்வர் ரேகா குப்தா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2015 – 24 வரை, ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவி வகித்தார். 2015 – 23 வரை, அவரது கட்சி மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா துணை முதல்வராக பதவி வகித்தார்.
கடந்த 2021 – 22ல், ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்த போது, புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதற்கு, பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அந்த கொள்கை ரத்து செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிகை
இந்த மதுபான கொள்கையில், 100 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது குறித்து விசாரிக்க, டில்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா சி.பி.ஐ.,க்கு பரிந்துரைத்தார். இதன்படி வழக்குப் பதிந்த சி.பி.ஐ., 2023 பிப்ரவரியில், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. 2024 மார்ச்சில், முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பண மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிந்தது. மேலும் இந்த வழக்கில், தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா, பஞ்சாப், ஹரியானா, உ.பி., உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலதிபர்களும் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவால் ஆறு மாதமும், மணீஷ் சிசோடியா இரு ஆண்டுகளும் டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை, டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடக்கும் நிலையில், சி.பி.ஐ., சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
கவலை அளிக்கிறது
இந்த வழக்கில், சிறப்பு நீதிபதி ஜிதேந்திர சிங் நேற்று அளித்த தீர்ப்பு: சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் இருக்கின்றன. அதில் சதித்திட்டத்துக்கான எந்தவொரு முகாந்திரமும் குறிப்பிடப்படவில்லை. வெறும் ஊகங்களின் அடிப்படையிலேயே சி.பி.ஐ.,யின் வாதங்கள் கட்டமைக்கப்பட்டு உள்ளன. அவை சட்ட ரீதியான ஆய்வுக்கு உட்படுத்தும் வகையில் இல்லை
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக எந்தவொரு உறுதியான ஆதாரமும் இல்லை. போதிய அடிப்படை முகாந்திரமின்றி அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. இது, சட்டத்தின் ஆட்சிக்கு முரணானது. மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை. இதில் அவர் சம்பந்தப்பட்டதற்கான ஆவணங்கள் எதுவுமில்லை.
விசாரணையில் உள்ள ஓட்டைகளை மறைக்க, ‘அப்ரூவர்’ கொடுத்த வாக்குமூலங்களை மட்டுமே சி.பி.ஐ., நம்பியிருந்தது கவலை அளிக்கிறது. இது, தனிநபர் சுதந்திரத்திற்கு எதிரானது. எனவே, இந்த வழக்கில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உட்பட 23 பேர் விடுவிக்கப்படுகின்றனர். இந்த வழக்கை முறையாக விசாரிக்காத சி.பி.ஐ., விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
மேல்முறையீடு செய்வர்!
விசாரணை நீதிமன்றம் ஆதாரம் இல்லை என விடுவித்துள்ளது. இந்த வழக்கில், சி.பி.ஐ., அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கும். டில்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திலும் இந்த முறைகேடு தொடர்பான வழக்குகள் உள்ளன.
– சுதான்ஷு திரிவேதி ராஜ்யசபா எம்.பி., – பா.ஜ.,
இன்னும் முடியவில்லை!
டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் வந்துள்ள தீர்ப்பு விசாரணை நீதிமன்றத்துடையது. இதே வழக்கில் இதற்கு முன், டில்லி உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் கெஜ்ரிவாலுக்கு எதிராக கடுமையான கருத்துகளை பதிவு செய்துள்ளன. இந்த தீர்ப்பு மேல்முறையீட்டில் நிலைக்குமா என பார்க்க வேண்டும். சட்ட நடைமுறை முடியவில்லை.
– அமித் மாள்வியா, ஐ.டி., பிரிவு தலைவர், பா.ஜ.,
