டில்லி- லே ஸ்பைஸ்ஜெட் விமானம் நடுவானில் பழுது; 150 பயணிகளுடன் அவசர தரையிறக்கம்

புதுடில்லி: டில்லியில் இருந்து காஷ்மீரின் லே பகுதிக்குச் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் நடுவானில் பழுதானது. இதையடுத்து, விமானம் மீண்டும் டில்லிக்கே திருப்பி விடப்பட்டது.

தலைநகர் டில்லியில் இருந்து லே பகுதிக்கு SG 121 என்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் இன்று காலை 6.45 மணிக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 150 பயணிகள், விமான சிப்பந்திகள் உள்ளிட்டோர் இருந்தனர்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானிகள் குழுவினர் கண்டறிந்தனர். இதையடுத்து, முன் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக விமானத்தை மீண்டும் டில்லிக்கே திருப்பி இயக்க முடிவு செய்தனர்.

அதன்படி, டில்லி விமான நிலையத்தில் பாதுகாப்பாக விமானம் தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கி விட்டனர். தயாராக இருந்த பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு மீட்புக் குழுவினர் உதவியுடன் விமானம் ஆய்வுக்காக தனி இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

விமானத்தில் எதனால் கோளாறு ஏற்பட்டது என்பதுபற்றிய விவரங்கள் வெளியிடப்பட வில்லை. ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம், ‘டில்லியில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது, பயணிகள் அனைவரும் நலமாக உள்ளனர்’ என்று தெரிவித்துள்ளது.

Source link