டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல், ரியாலிட்டி ஷோக்கள், மற்றும் சிறந்த பொழுதுபோக்கு மற்றும் செய்திச் சேனல்களில் எவை ரசிகர்கள் மத்தியில் செல்வாக்குடன் இருக்கிறது என்பதை வாராவாரம் கணக்கிட்டு வழங்கும் ஒரு அமைப்புதான் ’பார்க்’ என சுருக்கமாக அழைக்கப்படும் பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சில்.
சீரியல் ஏரியாவில் டி.ஆர்.பி ரேட்டிங் என கேள்விப் பட்டிருப்பீர்களே, அந்த ரேட்டிங்கை வழங்குவதும் இந்த அமைப்புதான்.
இந்த அமைப்பு வழங்கும் ரேட்டிங் புள்ளிகளை வைத்தே டிவி சேனல்களுக்கு விளம்பர வருவாய் வரும்.
இந்தியாவில் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த அமைப்பு வாரந்தோறும் வியாழக்கிழமை ரேட்டிங் விபரத்தை அளித்து வருகிறது.

இந்தச் சூழலில் மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தற்போது இந்த அமைப்புக்கு ஒரு அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது,
செய்திச் சேனல்களின் நிகழ்ச்சிகள் தொடர்பான ரேட்டிங் விபரங்களை அடுத்த நான்கு வாரங்களுக்கு அல்லது அரசிடமிருந்து மறு உத்தரவு வரும் வரை வெளியிட வேண்டாம் என்பதுதான் அந்த உத்தரவு.
அமெரிக்க – இஸ்ரேல், ஈரான் இடையே போர் நடந்து வருகிற இந்தச் சூழலில் செய்திச் சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் செய்திகள் மக்கள் மத்தியில் பதட்டத்தையும் பீதியையும் உருவாக்குவதால் இந்த நடவடிக்கையாம்.
போரில் அரபு நாடுகள் பல நேரடியாகப் பாதிக்கப்பட்டு வருகிற சூழலில், அங்கு வசிக்கும் இந்தியர்கள் குறித்து இங்குள்ள அவர்களது உறவினர்கள் மத்தியில் அச்சம் நிலவி வரும் நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கை அவசியமானதே எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
