'டி-20' உலக கோப்பை திருவிழா: சாதிக்குமா இந்தியா

மும்பை: ‘டி-20’ உலக கோப்பை தொடர் கோலாகலமாக ஆரம்பமாகிறது. அதிரடி பேட்டர்களின் சிக்சர் மழை, வேகப்புயல்களின் துல்லிய ‘யார்க்கர்’, சுழல் நாயர்களின் ‘மேஜிக்’ என பந்துக்கு பந்து பரபரப்பான போட்டிகளை காணலாம். சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பை வென்று வரலாறு படைக்க காத்திருக்கிறது.

இந்தியா, இலங்கையில் ஐ.சி.சி., 10வது ‘டி-20’ உலக கோப்பை தொடர் (பிப். 7-மார்ச் 8) நடக்க உள்ளது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட 20 அணிகள் பங்கேற்கின்றன. லீக், ‘சூப்பர்- 8’ சுற்று, பைனல் சேர்த்து மொத்தம் 55 போட்டிகள் நடக்க உள்ளன. முதல் போட்டியில் இந்திய அணி, அமெரிக்காவை எதிர்கொள்கிறது.

சபாஷ் அபிஷேக் : கடந்த 2024ல் பார்படாசில் நடந்த ‘டி-20’ உலக கோப்பை பைனலில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி, கோப்பை வென்றது. அப்போதைய கேப்டன் ரோகித் சர்மா, கோலி, ரவிந்திர ஜடேஜா போன்ற சீனியர் வீரர்கள் சர்வதேச ‘டி-20’ அரங்கில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். தற்போது சூர்யகுமார் தலைமையில் களமிறங்குகிறது. ‘டாப்-ஆர்டர்’ பேட்டிங் வலுவாக உள்ளது. துவக்கத்தில் வரும் அபிஷேக் சர்மா, எதிரணி பந்துவீச்சை அடித்து நொறுக்குவது பலம். ‘டி-20’ அரங்கின் ‘நம்பர்-1’ பேட்டரான இவர், சமீபத்திய நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியில் 14 பந்தில் அரைசதம் விளாசினார். சாம்சன் சறுக்கினாலும், மற்றொரு கீப்பர்-பேட்டர் இஷான் கிஷான் அருமையான ‘பார்மில்’ உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான 5வது போட்டியில் 42 பந்தில் சதம் விளாசினார். இதே போல கேப்டன் சூர்யகுமாரும் ‘மிஸ்டர் 360 டிகிரி’ வீரராக, மைதானத்தின் நாலாபுறமும் பந்தை விளாசுகிறார். பயிற்சியாளர் காம்பிர்-சூர்யகுமார் இடையே நல்லுறவு காணப்படுகிறது. இருவரது கூட்டணியில் இந்தியா பங்கேற்ற 39 போட்டியில் 31ல் (வெற்றி சதவீதம் 79.48) வென்றுள்ளது. காயத்தில் இருந்து திலக் வர்மா மீண்டது நல்லது. ‘ஆல்-ரவுண்டர்’ பணிக்கு ஹர்திக் பாண்ட்யா, துணை கேப்டன் அக்சர் படேல், ஷிவம் துபே உள்ளனர். ‘பினிஷராக’ அசத்த ரிங்கு சிங் இருக்கிறார்.

வேகப்பந்துவீச்சில் மிரட்ட பும்ரா, அர்ஷ்தீப் சிங், ‘சுழலில்’ அசத்த வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் உள்ளனர். ‘டி-20’ அரங்கின் நம்பர் -1 அணியாக திகழும் இந்தியா, தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பை வென்று சாதனை படைக்க காத்திருக்கிறது.

‘சூப்பர்’ மார்க்ரம்: கடந்த முறை பைனலில் இந்தியாவிடம் தோற்ற தென் ஆப்ரிக்க அணி, சவாலுக்கு தயாராக உள்ளது. கேப்டன் மார்க்ரம், பிரவிஸ், ‘கில்லர்’ மில்லர், யான்சென், ரபாடா, மஹாராஜ் பலம் சேர்க்கின்றனர். ஆஸ்திரேலிய அணிக்கு கைகொடுக்க டிராவிஸ் ஹெட், கேப்டன் மிட்சல் மார்ஷ், மேக்ஸ்வெல், டிம் டேவிட் உள்ளனர். கம்மின்ஸ் காயத்தால் விலகியது பின்னடைவு.

ஆப்கன் அதிர்ச்சி: இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி புரூக், டக்கெட், பட்லர், ஜோப்ரா ஆர்ச்சரை நம்பி களமிறங்குகிறது. நியூசிலாந்து அணியில் ‘டி-20’ போட்டிக்கு ஏற்ற ‘சுழல்’ நாயகன் கேப்டன் சான்ட்னர், டேரில் மிட்சல், ரச்சின் ரவிந்திரா உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஷாய் ஹோப், ஹெட்மெயர், ஷெப்பர்டு நம்பிக்கை தருகின்றனர். ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் அதிர்ச்சி அளிக்கலாம். நேபாளம், நமீபியா போன்ற கத்துக்குட்டி அணிகளும் களத்தில் உள்ளன.

வங்கதேச அணி நீக்கம், இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்தது போன்ற சர்ச்சைகளை கடந்து, இத்தொடர் வெற்றிகரமாக நடக்க உள்ளது. ‘டி-20’ போட்டியில் ஒரே ஓவரில் போட்டியின் முடிவு திசை மாறும். இதை உணர்ந்து இந்திய அணி கவனமாக செயல்பட்டால், 140 கோடி மக்களின் கோப்பை கனவை நனவாக்கலாம்.

துணிச்சல்

இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில், ”கடந்த 2-3 ஆண்டுகளாக ‘டி-20’ போட்டிகளில் சிறப்பாக விளையாடுகிறோம். முன்பு இரு தரப்பு தொடர், ஐ.சி.சி., தொடருக்கு என வெவ்வேறு விதமாக விளையாடினோம். இப்போது ஒரே மனநிலையுடன் போட்டிகளை எதிர்கொள்கிறோம். ‘டி-20’ உலக கோப்பையிலும் எங்களது அதிரடி ஆட்டம் தொடரும். தனிநபர் சாதனையைவிட அணியின் நலனுக்கு பயிற்சியாளர் காம்பிர் முன்னுரிமை அளிக்கிறார். வீரர்கள் துணிச்சலாக விளையாடுகின்றனர். வாஷிங்டன் சுந்தர் காயத்தில் (விலா எலும்பு) இருந்து 100 சதவீதம் தேற வேண்டும். அதுவரை காத்திருப்போம்,” என்றார்.

முத்தான மூன்று

கடந்த 2007ல் நடந்த முதல் சீசனில் தோனி தலைமையிலான இந்திய அணி ‘டி-20’ உலக கோப்பை வென்றது. 17 ஆண்டுகளுக்கு பின், 2024ல் ரோகித் சர்மாவின் இந்திய அணி ‘டி-20’ உலக சாம்பியன் ஆனது. இம்முறை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாதிக்கும் பட்சத்தில், ‘டி-20’ உலக கோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக 2 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய முதல் அணி, 3 முறை கோப்பை வென்ற முதல் அணி, சொந்த மண்ணில் உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற முதல் அணி என்ற முத்தான மூன்று சாதனை படைக்கலம்.

பைனல் செல்லும் பாதை

‘உலக’ தொடரில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும்.

* லீக் சுற்று முடிவில் 4 பிரிவில் ‘டாப்-2’ இடம் பெறும் அணிகள் ‘சூப்பர்-8’ சுற்றுக்கு முன்னேறும்.

* இதில் 8 அணிகள், தலா 4 என, இரு பிரிவுகளாக பிரிக்கப்படும்.

* ஒவ்வொரு அணியும் மற்ற 3 அணியுடன், தலா ஒருமுறை மோதும்.

* முடிவில் இரு பிரிவிலும் (‘சூப்பர்-8’ சுற்று) முதல் இரு இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு (மார்ச் 4, 5) செல்லும். * அரையிறுதியில் வெல்லும் அணிகள் மார்ச் 8ல் நடக்கும் பைனலில் பலப்பரீட்சை நடத்தும்.

ரூ. 120 கோடி

‘டி-20’ உலக கோப்பை தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ. 120 கோடி. கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 27.48 கோடி பரிசு கிடைக்கும். இரண்டாவது இடம் பெறும் அணி ரூ. 14.65 கோடி பெறும்.

துவக்க விழா

இந்தியா, அமெரிக்க அணிகள் மோதும் லீக் போட்டி மும்பை, வான்கடே மைதானத்தில் இரவு 7:00 மணிக்கு துவங்குகிறது. இதற்கு முன் கண்கவர் துவக்க விழா நடக்கிறது. ‘டிரம்ஸ்’ சிவமணி இசையுடன் விழா துவங்குகிறது. நடிகை நோரா படேஹியின் நடனம் இடம் பெற உள்ளது. அனிருத் இசையில் உருவான ‘பீல் தி திரில்’ எனத் துவங்கும் ‘டி-20’ உலக கோப்பை தொடரில் ‘தீம்’ பாடல் பாடப்படும்.

இதுவரை சாம்பியன்

‘டி-20’ உலக கோப்பை கிரிக்கெட் அரங்கில் இந்தியா (2007, 2024), வெஸ்ட் இண்டீஸ் (2012, 2016), இங்கிலாந்து (2010, 2022) அணிகள் தலா 2 முறை கோப்பை வென்றன. பாகிஸ்தான் (2009), இலங்கை (2014), ஆஸ்திரேலியா (2021) அணிகள் தலா ஒரு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.

‘ரன் மெஷின்’ கோலி

அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் விராத் கோலி முதலிடத்தில் உள்ளார். இவர், 35 போட்டியில், 1292 ரன் எடுத்துள்ளார். அடுத்த இடத்தில் இந்தியாவின் ரோகித் சர்மா (1220 ரன், 47 போட்டி) உள்ளார்.

சாகிப் அசத்தல்

அதிக விக்கெட் சாய்த்த பவுலர் பட்டியலில் வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் முதலிடத்தில் உள்ளார். இவர், 43 போட்டியில், 50 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

இலங்கை ஆதிக்கம்

அதிக ரன் குவித்த அணிகளுக்கான வரிசையில் இலங்கை முதலிடத்தில் உள்ளது. ஜோகனஸ்பர்க்கில் 2007ல் நடந்த கென்யாவுக்கு எதிரான போட்டியில் 260/6 ரன் எடுத்திருந்தது. இப்பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் (218/4, எதிர்: இங்கிலாந்து, 2007, டர்பன்) உள்ளது.

உகாண்டா சோகம்

குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்த அணிகளுக்கான பட்டியலில் உகாண்டா (எதிர்: வெஸ்ட் இண்டீஸ், 2024), நெதர்லாந்து (எதிர்: இலங்கை, 2014) அணிகள் முதலிடத்தில் உள்ளன. இரு அணிகளும் தலா 39 ரன்னில் சுருண்டன. நியூசிலாந்துக்கு எதிராக 79 ரன்னுக்கு (2016) ‘ஆல்-அவுட்’ ஆனது இந்தியாவின் குறைந்தபட்ச ரன்னாக உள்ளது.

‘சிக்சர் மன்னன்’ கெய்ல்

அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் வரிசையில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார். இவர், 33 போட்டியில், 63 சிக்சர் அடித்துள்ளார்.

ஏழு மைதானம்

‘டி-20’ உலக கோப்பை தொடருக்கான போட்டிகள் இந்தியா, இலங்கையில் உள்ள 7 மைதானங்களில் நடக்கவுள்ளன. இந்தியாவில், ஆமதாபாத் (மோடி மைதானம்), சென்னை (சேப்பாக்கம்), டில்லி (அருண் ஜெட்லி மைதானம்), கோல்கட்டா (ஈடன் கார்டன்), மும்பையில் (வான்கடே) போட்டிகள் நடக்கின்றன. இலங்கையில், கொழும்பு (பிரேமதாசா மைதானம், எஸ்.எஸ்.சி., கிரிக்கெட் மைதானம்), கண்டியில் (பல்லேகெலே மைதானம்) போட்டிகள் நடக்கவுள்ளன.

* சென்னை சேப்பாக்கத்தில், முதன்முறையாக ‘டி-20’ உலக கோப்பை போட்டிகள் நடக்கவுள்ளன. இங்கு, மொத்தம் 7 போட்டிகள் (6 லீக், ஒரு ‘சூப்பர்-8’) நடக்கின்றன. இதில் பிப். 26ல் நடக்கவுள்ள ‘சூப்பர்-8’ போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோத வாய்ப்பு உள்ளது.

இருவர் மட்டும்

‘டி-20’ உலக கோப்பை வரலாற்றில், ரோகித் சர்மா (இந்தியா), சாகிப் அல் ஹசன் (வங்கதேசம்) என இருவர் மட்டும், கடந்த 9 சீசனிலும் விளையாடினர்.

மறக்க முடியுமா

டர்பனில் நடந்த ‘சூப்பர்-8’ போட்டியில் (2007, செப். 18) இந்தியாவின் யுவராஜ் சிங், இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 6 சிக்சர் பறக்கவிட்டார். சர்வதேச ‘டி-20’ அரங்கில் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்த யுவராஜ், அதிவேக அரைசதம் (12 பந்தில்) விளாசிய வீரரானார்.

* பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான லீக் போட்டியில் (2024, ஜூன் 17) ‘வேகத்தில்’ மிரட்டிய நியூசிலாந்தின் பெர்குசன் (4-4-0-3), 4 ஓவரில், ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல், 3 விக்கெட் கைப்பற்றினார். ‘டி-20’ உலக கோப்பை வரலாற்றில் 4 ஓவரையும் ‘மெய்டனாக’ வீசிய முதல் பவுலரானார் பெர்குசன்.

வம்சாவளி வீரர்கள்

‘டி-20’ உலக கோப்பையில் பங்கேற்கும் 19 அணிகளில் (இந்தியா தவிர்த்து) இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த 40 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக கனடா அணியில் 11 பேர் உள்ளனர். அமெரிக்கா (9), ஓமன் (7), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (7), நியூசிலாந்து (2), தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இத்தாலி, நெதர்லாந்து அணியில் தலா ஒரு இந்திய வம்சாவளி வீரர் உள்ளனர்.

Source link