புதுடில்லி: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 93 ரன்களில் அபார வெற்றி பெற்றது.
டில்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இந்தியா, நமீபியாவை எதிர்கொண்டது.அபிஷேக் ஷர்மா, சிராஜூக்கு பதிலாக, சஞ்சு சாம்சன், பும்ரா ஆகியோர் அணியில் இடம் பிடித்திருந்தனர். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நமீபியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய சஞ்சு சாம்சன், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2வது ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர் மற்றும் பவுண்டரியை விளாசிய அவர், 8 பந்துகளில் 22 ரன் குவித்து அவுட்டானார்.அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த இந்திய வீரர் இஷான் கிஷான் புதிய சாதனையை படைத்தார்.
5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளை அடித்து 24 பந்துகளில் 61 ரன் குவித்து இஷான் கிஷான் ஆட்டமிழந்தார். இவரது அதிரடியால் இந்திய அணி 6.5 ஓவரிலேயே 100 ரன்னை கடந்தது. தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் (12), திலக் வர்மா (25) ஆகியோர் அவுட்டாகினர்.
ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபேவின் அதிரடியால் இந்திய அணி மளமளவென ரன் குவித்தது. ஹர்திக் பாண்டியா 27 பந்துகளில் அரைசதம் அடித்த கையோடு அவுட்டானார். இறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன் குவித்தது.
210 ரன்கள் என்ற கடின இலக்கை எதிர்கொண்ட நமீபியா அணி, துவக்க வீரர்களான ஸ்டீன்காம்ப், பிரீலிங்க் ஒரளவு தாக்கு பிடித்தனர். பின்னர் ஸ்டீன்காம்ப் 29 ரன்களில் வருண் பந்தில் ஆட்டமிழந்தார். பிரீலிங்க் 22 ரன்களுக்கு அர்ஷ்தீப் சிங் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழந்து வெளியேறினர்.
இறுதியில் நமீபியா அணி, 18.2 ஓவர்களிலேயே 116 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். இந்நிலையில் இந்திய அணி 93 ரன்களில் அபார வெற்றி பெற்றது.
இந்திய தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். குரூப் ஏ பிரிவில் இந்திய அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
