உப்சாலா: போல் வால்ட் போட்டியில் 15வது முறையாக உலக சாதனை படைத்தார் டுப்ளான்டிஸ்.
சுவீடனின் உப்சாலா நகரில் மாண்டோ கிளாசிக் உள்ளரங்கு போட்டி நடந்தது. போல் வால்ட் போட்டியில் சொந்தமண்ணில் களமிறங்கினார் அர்மாண்ட் டுப்ளான்டிஸ் 26. இவர், டோக்கியோ (2021), பாரிஸ் (2024) ஒலிம்பிக்கில் தங்கம் வெனறவர். தவிர, நடப்பு உலக சாம்பியனாக திகழ்கிறார்.
சாதனை எப்படி
இம்முறை, முதல் மூன்று வாய்ப்பில் 5.56, 5.90, 6.08 மீ., என தாவினார். நான்காவது வாய்ப்பில் அதிகபட்சம் 6.31 மீ., உயரம் தாவி, தங்கம் கைப்பற்றினார். தவிர, தனது முந்தைய 6.30 மீ., சாதனையை தகர்த்தார்.
போல் வால்ட் போட்டியில் 15வது முறையாக புதிய உலக சாதனை படைத்தார். நார்வேயின் சாண்ட்ரே (6.00 மீ.,), பிராட்போர்டு (5.90) இரண்டு, மூன்றாவது இடம் பெற்றனர். அமெரிக்காவின் கென்ரிக்ஸ் (5.90) ஆஸ்திரேலியாவின் கர்டிஸ் மார்ஷல் (5.90)4, 5வது இடம் பெற்றனர்.
2020 முதல்…
கடந்த 2020ல் முதன் முதலில் டுப்ளான்டிஸ், 6.17 மீ., தாவி உலக சாதனை படைத்தார் டுப்ளான்டிஸ். அடுத்து 6.18 மீ., தாவினார். பின் 2022ல் 3 (6.19, 6.20, 6.21), 2023ல் 2 (6.22, 6.23), 2024ல் 3 (6.24, 6.25, 6.26), 2025ல் 4 (6.27, 6.28, 6.29, 6.30) என மொத்தம் 14 முறை அடுத்தடுத்து உலக சாதனை படைத்தார். தற்போது 15வது முறை சாதித்துள்ளார்.
