ஆரம்பத்தில் இருந்தே ஏற்றத்தை சந்தித்து உயர்ந்த புள்ளிகளை இழந்து, பின் மீண்டு என தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிப்டி, இரண்டு மணிக்கு மேல் திடீரென ஒரே பாய்ச்சலாக கணிசமான ஏற்றத்தைச் சந்தித்து, நாளின் இறுதியில் 285 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் ‘நிப்டி மைக்ரோகேப் 250’ குறியீடு குறைந்த பட்சமாக 1.04 சதவிகித ஏற்றத்துடனும்; ‘நிப்டி ஸ்மால்கேப் 50’ குறியீடு அதிகபட்சமாக 1.85 சதவிகித ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 17 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 2 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் ‘நிப்டி மெட்டல்’ குறியீடு அதிகபட்சமாக 2.29 சதவிகித ஏற்றத்துடனும்; நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 0.59 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,335 பங்குகளில், 2,210 ஏற்றத்துடனும்; 1,038 இறக்கத்துடனும்; 87 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. 20, 50, 100 மற்றும் 200 நாள் சாரசரிகளுக்கு கீழேயே இன்னும் நிப்டி இருக்கிறது. குறுகிய கால அளவீட்டில் இறக்கத்தை சந்திக்க வாய்ப்பு இருப்பதை போன்ற சூழல் நிலவுகின்ற போதிலும், ஒரு சில இண்டிகேட்டர்கள் ‘ஓவர் சோல்டு’ எனும் நிலைக்கு அருகில் இருப்பதால், சிறியதொரு ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது. தற்போதைக்கு 24,850/25,000 எனும் லெவல்கள் உடனடி ரெசிஸ்டென்ஸாக தெரிகிறது. 24,400 ஒரு முக்கிய சப்போர்ட்டாக உருவெடுத்துள்ளது. செய்திகளுக்கு ஏற்ப, நிலைமை மாற வாய்ப்புள்ளதால், டெக்னிக்கல் லெவல்கள் வேலை செய்யாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

