16 பரந்த சந்தை குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் ‘நிப்டி ஸ்மால்கேப் 250’ குறியீடு குறைந்தபட்சமாக 2.64 சதவிகித இறக்கத்துடனும்; ‘நிப்டி மிட்கேப் 50’ குறியீடு அதிகபட்சமாக 3.29 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்த நாளில், ‘நிப்டி ஆயில் & கேஸ்’ குறியீடு, குறைந்தபட்சமாக 1.98 சதவிகித இறக்கத்துடனும், ‘நிப்டி ஆட்டோ’ குறியீடு அதிகபட்சமாக 4.25 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
வர்த்தகம் நடந்த 3,306 பங்குகளில், 532 ஏற்றத்துடனும்; 2,677 இறக்கத்துடனும்; 97 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. எல்லா குறுகிய கால சராசரிகளுக்கும் கீழே வர்த்தகமாகிக்கொண்டிருக்கும் நிப்டியில், நெகட்டிவ் மொமெண்டம் தொடர்கிறது. ஆர்.எஸ்.ஐ., போன்ற இண்டிகேட்டர்கள் ‘ஓவர்சோல்டு’ என்ற நிலையில் இருக்கின்ற போதிலும், செய்திகள் சாதகமாக இல்லாத காரணத்தினால், இறக்கம் தொடர்கிறது. இது போன்ற நிலைமையில், டெக்னிக்கல் அனாலிசிஸ் பொய்யாகிப்போகும் வாய்ப்புகள் அதிகம். தற்போதைக்கு 23,000-த்தை தாண்டி கீழே இறங்கினால் 22,700 மற்றும் 22,500 வரையிலுமே சென்று திரும்ப வாய்ப்புள்ளது. ஏற்றம் வந்தாலுமே 23,800 எனும் ரெசிஸ்டென்ஸை தாண்டாதவரை அது தொடரும் என்று எதிர்பார்க்க முடியாத டெக்னிக்கல் சூழல் நிலவுகிறது.