புதுடில்லி: டில்லியில், பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ், ‘ஆசிய-ஓசியானியா குரூப்-1’ பிரிவு போட்டிகள் இன்று துவங்குகின்றன. இதில் இந்தியா, இந்தோனேஷியா, தென் கொரியா, மங்கோலியா, நியூசிலாந்து, தாய்லாந்து என, 6 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை ‘ரவுண்டு-ராபின்’ முறையில் மோதும். முடிவில், ‘டாப்-2’ இடம் பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். கடைசி 2 இடம் பிடிக்கும் அணிகள், ‘ஆசிய-ஓசியானியா குரூப்-2’ பிரிவுக்கு தள்ளப்படும்.
இதற்கான இந்திய அணியில் அன்கிதா ரெய்னா, ருதுஜா, வைஷ்ணவி அத்கர், சஹாஜா, ஜீல் தேசாய் இடம் பெற்றுள்ளனர். மற்ற இந்திய வீராங்கனைகளான ஸ்ரீவள்ளி ராஷ்மிகா (முதுகு பகுதி), வைதேகி சவுத்ரி (கணுக்கால்) காயம் காரணமாக விலகினர். அனுபவ அன்கிதா, ஒற்றையர், இரட்டையர் பிரிவில் களமிறங்க உள்ளார். இவருடன், இரட்டையரில் ருதுஜா ஜோடி சேரலாம். சமீபத்திய ஐ.டி.எப்., தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட ஜீல் தேசாய், வைஷ்ணவி, சஹாஜா கைகொடுத்தால், இந்திய அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறலாம்.
கடந்த ஆண்டு பெங்களூருவில் நடந்த ‘பிளே-ஆப்’ போட்டியில் ஏமாற்றிய இந்திய அணி, சுலோவேனியா, நெதர்லாந்து அணிகளிடம் தோல்வியடைந்து, ‘குரூப்-1’ பிரிவுக்கு தள்ளப்பட்டது.
