புதுடில்லி: மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அந்த மாநிலத்தைச் சேர்ந்தவரும் இந்திய டென்னிஸ் முன்னாள் வீரருமான லியாண்டர் பயஸ், 51, பா.ஜ.,வில் நேற்று இணைந்தார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு, ஏப்., 23 மற்றும் 29ல் தேர்தல் நடக்கவிருக்கிறது. முதற்கட்டமாக, 152 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கவுள்ளது.
இந்நிலையில், டில்லியில் உள்ள பா.ஜ., தலைமையகத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு முன்னிலையில், இந்திய டென்னிஸ் அணியின் முன்னாள் வீரர் லியாண்டர் பயஸ் அக்கட்சியில் நேற்று இணைந்தார்.
மத்திய இணை அமைச்சர் சுகந்த ம ஜு ம்தார், அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜி ஜு கூறியதாவது:
லியாண்டர் பயஸுக்கு தனி அறிமுகம் எதுவும் தேவையில்லை. அவர், யார் என்பதை நாடே அறியும். எனினும், லியாண்டர் பயஸ் பா.ஜ.,வில் இணைந்திருப்பது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. விளையாட்டுத் துறைக்கும் வீரர்களுக்கும் பிரதமர் மோடி ஆற்றிய பணிகளால் ஈர்க்கப்பட்டு, பா.ஜ.,வில் அவர் இணைந்துள்ளார். அவரை முழுமனதுடன் வரவேற்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன்பின் லியாண்டர் பயஸ் கூறியதாவது:
நான், 40 ஆண்டுகளாக நாட்டிற்காக விளையாடினேன். இனி, நாட்டு மக்களுக்கும் இளைஞர்களுக்கும் சேவை செய்வேன். என் பார்வையில் ‘கேலோ இந்தியா’ மற்றும் ‘டாப்ஸ்’ ஆகிய திட்டங்கள் விளையாட்டு வீரர்களுக்குச் சிறந்தவை.
வரும் 2036ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, 2021ல் திரிணமுல் காங்கிரசில் இணைந்த லியாண்டர் பயஸ், 2022ல் நடந்த கோவா சட்டசபை தேர்தலில் அக்கட்சிக்காக பிரசாரம் செய்தார். அதன்பின் கட்சிப் பணிகளில் அதிக ஈடுபாடு காட்டாமல் இருந்தார்.
சமீபத்தில், மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில், பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து பேசிய நிலையில், நேற்று லியாண்டர் பயஸ் அக்கட்சியில் இணைந்தார்.
விரைவில், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜ., சார்பில் அவர் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
