டென்மார்க்கில் அவசர பொதுத்தேர்தல்: கிரீன்லாந்து விவகாரத்தால் திடீர் முடிவு

கோபன்ஹேகன்: கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்கா உடனான மோதலுக்கு இடையே, டென்மார்க்கில் அவசர பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று பிரதமர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமாக உள்ள கிரீன்லாந்து, ஆர்டிக் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய தீவு நாடாகும். தேசிய பாதுகாப்பு கருதி கிரீன்லாந்தை, அமெரிக்காவுடன் இணைக்கவேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

இதற்கு டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடரிக்சன் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கிரீன்லாந்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கூறி வருகிறார். கிரீன்லாந்து விஷயத்தில் அவரது உறுதியான நிலைப்பாட்டால், சமீப காலமாக அவரது சோஷியல் டெமாக்ரட் கட்சியின் ஆதரவு கணிசமாக உயர்ந்துள்ளது.

இதை சாதகமாக்கி வெற்றியை உறுதி செய்ய டென்மார்க்கில் அவசர பொதுத் தேர்தலை அறிவித்துள்ளார் பிரதமர் மெட்டே பிரெடரிக்சன். வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருந்த தேர்தலை ஏழு மாதங்களுக்கு முன்னதாக மார்ச் 24ம் தேதிக்கு மாற்றியுள்ளார்.

பார்லிமென்ட்டில் இந்த அறிவிப்பை வெளியிட்ட அவர், அடுத்த 4 ஆண்டுகள் டென்மார்க் மக்களுக்கும் ஐரோப்பாவுக்கும் மிக முக்கியமானவை. நாம் அமெரிக்காவுடனான உறவை மறுவரையறை செய்ய வேண்டிய நேரம் இது. ஐரோப்பியர்களாக நாம் சொந்த காலில் நிற்க வேண்டிய தருணம், என்று வலியுறுத்தினார்.

Source link