டெல்லியில் மாணவர்கள் மீதான தாக்குல்.. வரலாற்றில் கருப்பு பக்கங்களாக பதிவு செய்யப்படும் கோர நிகழ்வு: சீமான் கடும் கண்டனம் – ntk seeman strongly condemns the attack on students in delhi

தலைநகர் டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு, நுழைவு தேர்வு முறைகேடுகள் உள்ளிட்டவை தொடர்பாக தன்னெழுச்சியாக போராட்டங்கள் நடந்து வருகிறது. இளைஞர்கள், மாணவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். இதனிடையில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ள சம்பவம் மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், நீட் தேர்வில் முறைகேடு செய்த குற்றவாளிகளை கைது செய்யாமல், நீதி விசாரணை கோரி போராடும் இளைஞர் கூட்டத்தின் மீது அரச வன்முறையை கட்டவிழ்த்து விடுவதா? என்ற கேள்வியை தனது அறிக்கையில் முன்வைத்துள்ளார் சீமான்.

தொடர்ந்து அவருடைய பதிவில், நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவு தேர்வில் நடக்கும் முறைகேடுகளுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்கின்ற அமைப்பு 20 நாட்களுக்கு மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் அறப்போராட்டம் செய்து வருவதை முழுமையாக ஆதரிக்கிறேன். அந்த போராட்டத்துடைய நீட்சியாக, நாடாளுமன்றம் நோக்கி அக்கட்சியின் செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என யாவரும் பேரணியாய் செல்ல முயன்றனர். அவர்கள் மீது கண்மூடித்தனமாக காவல்துறையின் மூலமாக தாக்கியிருக்கும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசுடைய செயலை வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

அதோடு நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை தடுக்காமல், அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் நீதி கேடு அறவழியில் போராடும் இளைய தலைமுறையினர் மீது தாக்குதல் தொடுப்பது பேரவலம் என்ற குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். சகித்து கொள்ளவே முடியாத அரச வன்முறை எனவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து நாடாளுமன்றம் என்பது நாட்டின் குடிமக்களால் தேர்வு செய்யப்பட்டது.

அந்த அவை நோக்கி சென்று நீதி கேட்பதை தவிர எளிய மக்களுக்கு வேறு என்ன வழி உள்ளது? இவ்வளவு நடந்தும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா வாய்மூடி மௌனமாக இருப்பது அதிகாரத் திமிர் இல்லையா? என கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நீட் தேர்வு என்பதே மிகப்பெரும் முறைகேடு. மோசடி. அதனை முற்றாக துடைத்தெறிய வேண்டும் என்பதற்காகவே தமிழர் நிலத்தில் போராடி கொண்டிருக்கிறோம். எனவே நீட் தேர்வு வினாத்தாள்கள் கசிவு முறைகேடுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை மிகச்சரியானது. அதனை முழுமையாக நாதக வரவேற்கிறது எனவும் தெரிவித்துள்ளார் சீமான்.

தொடர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மீது ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு அரச பயங்கரவாதத்தை ஏவிவிட்டு, வன்முறை களமாக மாற்றியது ஓட்டுமொத்த நாட்டுக்கும் பேரவமானம். வரலாற்றில் கருப்பு பக்கங்களாக பதிவு செய்யப்படும் கோர நிகழ்வாகும் எனவும் கடும் விமர்சனங்களை சீமான் தன்னுடைய பதிவில் முன்வைத்துள்ளார்.

அதோடு நீட் மற்றும் நுழைவு தேர்வுகள் தொடர்பான முறைகேடுகள் சம்பந்தமாக நீதி விசாரணை நடத்த வேண்டும். ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் சார்பாக ஒன்றிய அரசை வலியுறுத்துவதாக சீமானின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link