தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்று முன்தினம் (06.04.2026) மதியம் 3 மணியுடன் நிறைவு பெற்றது. ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த தேர்தலை முன்னிட்டு, அனைத்து கட்சி வேட்பாளர்களும் கிராம கிராமங்களாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் துணை முதல்வரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் சென்னை கொளத்தூர் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் இன்று (08-04-26) தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “அப்பாவுக்கு பையன் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். அதைவிட பெருமையாக நம் தலைவருக்கு ஒரு தொண்டனாக வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். இந்தியாவிலேயே நம்பர் ஒன் தொகுதி என்றால் இந்த கொளத்தூர் தொகுதி. ஸ்டார் தொகுதியாக இருக்கலாம் ஆனால் இந்தியாவிலேயே சூப்பர் ஸ்டார் தொகுதி என்றால் கொளத்தூர் தொகுதி தான். இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா தலைவர்களும் நம்முடைய முதலமைச்சரை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த தேர்தல் டெல்லி அணிக்கும் தமிழ்நாடு அணிக்கும் தான். டெல்லி அணியை ஓட ஓட விரட்ட வேண்டும். டெல்லி அணியில் மோடியும், மோடியின் நம்பர் ஒன் அடிமை எடப்பாடி பழனிசாமி தான் இருக்கிறார்கள். ஒன்றிய அரசு, பாஜக அரசு நமக்கு துணையாக நிற்கவில்லை. நமக்கான திட்டங்களை கொடுக்கவில்லை. ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கென்று எந்த திட்டமும் கிடையாது, தமிழ்நாடு என்ற பெயரே பட்ஜெட்டில் இல்லை. இப்படி தமிழ்நாட்டை தொடர்ந்து ஒன்றிய பா.ஜ.க அரசு புறக்கணித்து வருகிறது. அந்த அரசை விரட்டி அடிக்க வேண்டும். மீண்டும் அதிமுக – பா.ஜ.க அடிமை கூட்டணி தமிழ்நாட்டுக்குள் நுழைந்துவிட்டால் தமிழ்நாட்டை எவ்வளவு பின்னோக்கி இழுத்து போடுவார்கள் என்று நீங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும்” என்று பேசினார்.
