பட மூலாதாரம், Dilnawaz Pasha
படக்குறிப்பு, மழையிலும் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர்
பிரசுரிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் புதன்கிழமை ஜந்தர் மந்தரில் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இன்று காலை மழையிலும் போராட்டக்காரர்கள் தார்பாலின் கூரை அமைத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செவ்வாய்க்கிழமை மாலையில் சிவசேனா (உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே) தலைவர் உத்தவ் தாக்கரே, திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா ஆகியோரும் ஜந்தர் மந்தர் சென்று போராட்டக்காரர்களை சந்தித்தனர்.
தர்மேந்திர பிரதான் கூறியது என்ன?
இதனிடையே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடருக்கு முட்டுக்கட்டை போடுவதற்காக மாணவர்களை அரசியல் ரீதியாகப் பயன்படுத்த விரும்புகிறார் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டியுள்ளார்.
ராகுல் காந்தி பிரதமரின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டம் நடத்தியதாகவும், இதனால் சாமானிய மக்கள் அவதிக்குள்ளாகினர் என்றும் தர்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை இரவில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
“மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் காங்கிரஸும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இடையூறு விளைவிப்பதற்காக, தொடர்ந்து மாணவர்களை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தி வருகின்றனர். ராகுல் காந்தியும் காங்கிரஸும் பிரதமரின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதனால் சாமானிய மக்கள் அவதிக்குள்ளாகினர் மற்றும் நடைமுறையில் உள்ள பாதுகாப்பு விதிகளும் புறக்கணிக்கப்பட்டன,” என தர்மேந்திர பிரதான் சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“முழுமையான விவாதத்துக்குத் தயாராக இருப்பதை அரசு ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருந்தது. இருந்தபோதிலும், காங்கிரஸ் கட்சி ஜனநாயக ரீதியிலான விவாதத்துக்குப் பதிலாக அரசியல் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்தது. மாணவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது அவர்களின் நோக்கமல்ல, மாறாக அரசியல் ரீதியாக தலைப்புச் செய்திகளில் இடம்பெறுவதற்காக இடையூறுகளை ஏற்படுத்துவதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. ராகுல் காந்தியை பொறுத்தவரை இது மாணவர்களைப் பற்றிய விஷயம் அல்ல. விவாதத்துக்கான சரியான வழி திறக்கப்பட்ட பிறகும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மோதலை உருவாக்கும் முயற்சியாகும்.”
பட மூலாதாரம், Raj K Raj/Hindustan Times via Getty Images
படக்குறிப்பு, ராகுல் காந்தி பிரதமரின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டம் நடத்தியதால் சாமானிய மக்கள் அவதிக்குள்ளாகினர் என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்தார் (கோப்புப் படம்)
“எங்கள் அரசு நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு குறித்து விவாதிக்கவும், இளைஞர்களின் ஒவ்வொரு நியாயமான கவலைகளுக்கு தீர்வு காண்பதற்கும் முழுமையாகத் தயாராக உள்ளது. இந்தியாவின் மாணவர்கள் அரசியல் பரப்புரைகளின் ஒரு பகுதியாக மாற்றப்படுவதை விட சிறந்த முறையில் நடத்தப்பட தகுதியானவர்கள். அவர்களுக்கு தேவை குழப்பம் அல்ல, நம்பிக்கை. கோஷங்கள் அல்ல, தீர்வுகள் தேவை. முட்டுக்கட்டைகள் அல்ல, பொறுப்புணர்வு தேவை,” என தர்மேந்திர பிரதான் மேலும் கூறினார்.
“நமது மாணவர்களின் கோபத்துக்கு மட்டுமல்லாமல், அவர்களின் கேள்விகளுக்கான பதில்கள், சீர்திருத்தங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கும் நாடாளுமன்றமே பொறுப்பாகும். இந்த விஷயங்களில் பணியாற்றுவதில் எங்கள் அரசு முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளது” எனவும் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோதி மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரின் ராஜினாமாவை வலியுறுத்தி, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பிக்கள் செவ்வாய்க்கிழமை பிரதமர் இல்லமான 7, லோக் கல்யாண் மார்க்குக்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து அவர்கள் காவல்துறையினரால் காவலில் வைக்கப்பட்டனர். இருப்பினும், சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவரும் காவலில் வைக்கப்பட்டிருந்த மற்ற தலைவர்களும் சத்ரசால் அரங்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
பத்திரிகையாளர் மீது தாக்குதலா? – காக்ரோச் ஜனதா கட்சி பதில்
பட மூலாதாரம், Kabir Jhangiani/NurPhoto via Getty Images
படக்குறிப்பு, காவல்துறை எவ்வளவுதான் தூண்டினாலும், யாரும் இதுபோன்ற வன்முறையில் ஈடுபடக் கூடாது என்று சிஜேபி தெரிவித்துள்ளது (கோப்புப் படம்: சௌரவ் தாஸ்)
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த சில போராட்டக்காரர்கள், ‘டைம்ஸ் நவ்’ ஊடகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் தேவ் கோடக் என்பவரைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து காக்ரோச் ஜனதா கட்சி இந்த தாக்குதலுக்கு தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
காவல்துறை எவ்வளவுதான் தூண்டினாலும், யாரும் இதுபோன்ற வன்முறையில் ஈடுபடக் கூடாது என, சிஜேபியின் முதன்மை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் கூறினார்.
சௌரவ் தாஸ் தனது எக்ஸ் பதிவில், “தேவ் (செய்தியாளர்) மீதான இந்தத் தாக்குதலை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். அவர் ஒரு சிறந்த செய்தியாளர். காவல்துறை எவ்வளவுதான் தூண்டினாலும், யாரும் இதுபோன்ற வன்முறையில் ஈடுபடக் கூடாது. எங்களை மன்னித்துவிடுங்கள் சகோதரர் தேவ். அனைவரும் அமைதியையும் நிதானத்தையும் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சிஜேபி போராட்டக்காரர்கள் தன்னைத் தாக்கியதாகவும், தன்னிடம் இருந்த மொபைல் போன் மற்றும் கடிகாரத்தைப் பறித்துச் சென்றதாகவும் செய்தியாளர் தேவ் கோடக் குற்றம் சாட்டியுள்ளார்.
சிஜேபியின் இந்தப் போராட்டத்தின் போது, போராட்டக்காரர்கள் பலமுறை ஊடகங்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியுள்ளனர், இது தொடர்பான வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு


