டெல் அவிவ்: இந்தியா – இஸ்ரேல் இடையிலான உறவானது ரத்தம் மற்றும் தியாகத்தால் எழுதப்பட்டது என இஸ்ரேல் பார்லிமென்டில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறினார்.
கையெழுத்து
9 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றார். டெல் அவிவ் நகரில் உள்ள பென்கரியான்விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடியை, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, தனது மனைவி சாராவுடன் நேரடியாக வந்து ஆரத்தழுவி வரவேற்றார். பிறகு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமரின் இந்த பயணத்தில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
இந்நிலையில், ‘ நெசெட்’ எனப்படும் இஸ்ரேல் பார்லிமென்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
நன்றி
அப்போது பிரதமர் பேசியதாவது:இந்த அவையில் நிற்பது எனக்கு பெருமையாகவும், கவுரவமாகவும் உள்ளது. இந்திய பிரதமர் என்ற முறையிலும், ஒரு பண்டைய நாகரிகத்தின் பிரதிநிதியாக, மற்றொரு நாகரிகத்தில் உரையாற்றுகிறேன். 140 கோடி இந்தியர்களின் வாழ்த்துகளையும், நட்பு மரியாதை மற்றும் கூட்டணிக்கான செய்தியையும் என்னுடன் கொண்டு வந்துள்ளேன். இந்த அவை சபாநாயகரின் அன்பான அழைப்பிற்கும், இந்திய வண்ணங்களை ஒளிர செய்த உங்களின் அற்புதமான செயலுக்கும் நன்றி கூறுகிறேன்.
உறுதியான ஆதரவு
2023 அக்.,7 ல் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். உங்களின் வேதனையை உணர முடிகிறது. சோகத்தை பகிர்ந்து கொள்கிறோம். இந்த தருணத்தில் இந்தியா முழு நம்பிக்கையுடனும், இஸ்ரேலுடன் உறுதியாக நிற்கிறது.அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை எந்த காரணத்தினாலும் நியாயப்படுத்த முடியாது. பயங்கரவாதத்தை நியாயப்படுத்தவும் கூடாது. பயங்கரவாதத்தின் வேதனையை இந்தியா நீண்ட நாட்களாக அனுபவித்து வருகிறது. பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு நிலையான மற்றும் ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கை தேவைப்படுகிறது. அனைத்து இடங்களிலும் அமைதியை பயங்கரவாதம் அச்சுறுத்துகிறது.
இந்தியா ஆதரவு
ஐநா அங்கீகரித்த காசா அமைதி திட்டமானது ஒரு வழியை ஏற்படுத்தி உள்ளது. இந்த திட்டத்துக்கு இந்தியா ஆதரவு அளித்து உள்ளது. இந்த திட்டமானது, பாலஸ்தீனப் பிரச்னையை தீர்ப்பது உட்பட பிராந்தியத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் நீடித்த மற்றும் நிலையான அமைதியை உறுதியளிக்கும் என இந்தியா நம்புகிறது. நமது அனைத்து முயற்சிகளும் தைரியம், மனிதநேயம் மற்றும் அறிவாற்றலால் வழிநடத்தப்படும்.இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள் உள்படஅப்பாவி மக்கள் கொல்லப்பட்ட மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை நாங்கள் நினைவு கூர்கிறோம். இரட்டை வேடம் போடாமல் பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற நிலையான மற்றும் சமரசமற்ற கொள்கையை இந்தியா கொண்டு உள்ளது. பயங்கரவாதம் சமூகங்களை சீர்குலைப்பது, வளர்ச்சியைத் தடுப்பது மற்றும் நம்பிக்கையை சிதைப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
அமைதிக்கான பாதை
பயங்கரவாதத்தை எதிர்க்க நிலையான மற்றும் ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கை தேவைப்படுகிறது. அமைதிக்கு அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உள்ளது. இதனால், நீடித்த அமைதி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்கும் அனைத்து முயற்சிகளுக்கு்ம இந்தியா ஆதரவு தருகிறது.காசா அமைதி முயற்சியை இந்தியா ஆதரிக்கிறது. இந்த பிராந்தியத்துக்கு நியாயமான மற்றும் நீடித்த அமைதிக்கான உறுதிமொழியை அது கொண்டு உள்ளது. அமைதிக்கான பாதை எளிதானது அல்ல. ஆனால், இந்த பிராந்தியத்தில் பேச்சுவார்த்தை, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக உங்களுடனும், உலகத்துடனும் இந்தியா இணைந்து செயலாற்றும்.
அதிகார மையம்
9 ஆண்டுகளுக்கு முன்னர், இஸ்ரேலுக்கு வந்த முதல் பிரதமர் என்ற பெருமை எனக்கு கிடைத்தது. மீண்டும் இங்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இஸ்ரேலை இந்தியா முறையாக அங்கீகரித்த 1950 செப்.,17 அன்று தான் நானும் பிறந்தேன். இஸ்ரேலுக்கு முதல் முறையாக கடந்த 2006 ம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்தபோது வந்தேன். பிறகு 2017 ல் பிரதமராக வந்த போது நமது உறவானது வலுப்பெற்றது. அப்போது முதல் நமது பேச்சுவார்த்தை விரிவடைந்து போகிறது. பல துறைகளில் இந்த உறவை நாம் ஒருங்கிணைத்து வருகிறோம்.கடந்த சில ஆண்டுகளாக இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரமாக உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் சர்வதேச அளவில் முதல் 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். அதேநேரத்தில் புதுமையின் அதிகார மையமாகவும், தொழில்நுட்பத்தின் தலைவராகவும் இஸ்ரேல் விளங்குகிறது.
முக்கியமானது
நிச்சயமற்ற இன்றைய உலகில் நம்பிக்கைக்குரிய கூட்டாளிகளான இந்தியா , இஸ்ரேல் இடையிலான வலிமையான பாதுகாப்பு ஒப்பந்தம் மிகவும் முக்கியமானதுவர்த்தகத்தை விரிவுபடுத்தவும், முதலீட்டை அதிகரிக்கவும், உள்கட்டமைப்பு வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும் நாம் உறுதிபூண்டுள்ளோம். கடந்த ஆண்டு கையெழுத்தான இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தமானது நமதுதொழில்களுக்கு நம்பிக்கையை தருகிறது. கடந்த சில ஆண்டுகளில் , இந்தியா பல முக்கியமான வர்த்தக ஒப்பந்தங்களை போட்டு உள்ளது. தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் போட இந்திய குழுவினர் கடுமையாக உழைத்து வருகின்றனர். ஐரோப்பிய யூனியன் , பிரிட்டன், ஐக்கிய அரபு எமீரேட்ஸ், ஓமன் ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் போட்டு உள்ளோம். இரு தரப்பு வர்த்தகம் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து உள்ளது. அதேநேரத்தில் நமது முழு திறனை பிரதிபலிக்கவில்லை. இதனால், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்காக நமது குழுவினர் உழைத்துவருகின்றனர். அது நமது உறவின் அளவிட முடியாத ஆற்றலை வெளிப்படுத்தும்.இந்த நிலத்துடனான இந்தியாவின் உறவானது ரத்தம் தியாகத்தால் எழுதப்பட்டு உள்ளது. முதல் உலகப்போரில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்த பிராந்தியத்தில் தான் உயிரிழந்தனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
