வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) தொடரை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சமி வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு சர்வதேச வீரர்களுக்கான ஒப்பந்த ஊதியத்தை 25 சதவீதம் குறைப்பதாக அறிவித்துள்ள நிலையில், வீரர்களின் சிறப்பான ஆட்டம் வாரியத்துடன் ஊதியம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தவும், புதிய ஸ்பான்சர்களை ஈர்க்கவும் உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி 8-வது இடத்தைப் பிடித்த நிலையில், இந்த முறை முதல் 5 இடங்களுக்குள் முன்னேறி கூடுதல் ஊக்கத்தொகையைப் பெறுவதே அணியின் இலக்காக உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான தொடரில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டதைச் சுட்டிக்காட்டிய சமி, வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலும் அதே உறுதியுடன் விளையாட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த ஆண்டில் இதுவரை டெஸ்ட் தொடரை இழக்காத வெஸ்ட் இண்டீஸ் அணி, வங்காளதேச மண்ணில் கடும் சவாலை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
