டெஹ்ரான்:ஈரான் வைத்த 10 அம்சக் கோரிக்கைகளை பரிசீலிப்பதாகக் கூறி, இரண்டு வார போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க

டெஹ்ரான்:ஈரான் வைத்த 10 அம்சக் கோரிக்கைகளை பரிசீலிப்பதாகக் கூறி, இரண்டு வார போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்புக்கொண்டதால் மேற்காசியாவில் நிலவி வந்த பதற்றம் தற்காலிமாக தணிந்துள்ளது.

மேற்காசிய நாடான ஈரான் மீது கடந்த பிப்., 28ல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல்களை துவங்கின. இந்தப் போரில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட முக்கிய தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடியாக மேற்காசியாவில் உள்ள அமெரிக்க படைத் தளங்களை குறிவைத்து தாக்கிய ஈரான், உலகின் முக்கிய எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியையும் மூடியது. இதனால் உலகப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து போரை நிறுத்த மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் காலக்கெடு விதித்தார். ‘ஈரான் என்ற நாகரிகம் ஒன்று அழிய போகிறது. அது மீண்டும் திரும்ப கொண்டு வர முடியாத அளவுக்கு இருக்கும்’ என்று கடுமையாக எச்சரித்திருந்தார். அவர் விதித்த கெடு இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 5:30 மணியோடு நிறைவடைய இருந்தது.

முன்னதாகவே எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து இந்தப் போரை முடிக்க அமெரிக்கா மற்றும் ஈரானிடம், நம் அண்டை நாடான பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வந்தது. இந்தச் சூழலில், ஈரானுக்கு விதித்த காலக்கெடுவை இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க, டிரம்ப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று அதிகாலையில் வேண்டுகோள் விடுத்தார்.

இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மூலம் வந்த, ஈரானின், 10 அம்ச திட்டத்தை ஏற்று, கடைசி நேரத்தில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக டிரம்ப் அறிவித்தார். மேலும், டிரம்ப் இதை இருதரப்பு போர் நிறுத்தம் என்று குறிப்பிட்டார்.

ஈரான் தரப்பும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தினால், நாங்களும் இரண்டு வாரங்களுக்கு எங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை நிறுத்துவோம். ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்ல ஈரான் ராணுவம் அனுமதிக்கும். ஆனால், ஈரானின் ஆயுதப் படைகளின் கட்டுப்பாட்டிலேயே, ஜலசந்தி இருக்கும்,” என்றார்.

இந்த உடன்பாடுகளின்படி, அடுத்ததாக போர் நிறுத்த ஒப்பந்தம் செய்வது மற்றும் ஈரானின் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் பேச உள்ளன.

ஈரானின் 10 நிபந்தனைகள் 1. ஈரான் மீது தாக்குதல் நடத்தக் கூடாது 2. ஹார்முஸ் ஜலசந்தியின் மீது ஈரானின் கட்டுப்பாடு தொடரும் 3. அணுசக்திக்கான யுரேனியம் செறிவூட்டலை ஏற்க வேண்டும் 4. ஈரான் மீதான முதன்மை பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் 5. அனைத்து இரண்டாம் நிலை பொருளாதார தடைகளையும் நீக்கவேண்டும் 6. ஈரானுக்கு எதிரான ஐ.நா. பாதுகாப்பு சபையின் அனைத்து தீர்மானங்களையும் ரத்து செய்ய வேண்டும் 7. ஈரானுக்கு எதிரான சர்வதேச அணுசக்தி முகமையின் அனைத்து தீர்மானங்களையும் ரத்து செய்ய வேண்டும் 8. ஈரானுக்கு போர் இழப்பீடு வழங்கவேண்டும் 9. மேற்காசியாவில் இருந்து அமெரிக்கப் படைகளை முழுமையாக வெளியேற்ற வேண்டும் 10. லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள் உட்பட ஈரான் கூட்டாளிகள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும்

கற்காலமும் பொற்காலமும் போரை நிறுத்த ஈரான் முன்வராவிட்டால், அந்த நாடு கற்காலத்துக்கு சென்றுவிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்து வந்தார். இந்நிலையில், போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் உட்பட மேற்காசியாவுக்கு இனி பொற்காலம் என்று கூறியுள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் டிரம்ப் கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி அசிம் முனீர் ஆகியோருடன் நடத்திய உரையாடலின் அடிப்படையில், ஈரான் மீது அனுப்ப தயாராக இருந்த ஏவுகணைகளை தற்காலிகமாக நிறுத்துகிறேன். ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக, உடனடியாக, பாதுகாப்பாகத் திறந்தால், 2 வாரங்களுக்கு தாக்குதல்களை நிறுத்துகிறேன். இது இரு தரப்பு போர் நிறுத்தம். நாங்கள் ஏற்கெனவே அனைத்து ராணுவ இலக்குகளையும் எட்டிவிட்டோம். ஈரானுடன், மேற்காசிய அமைதிக்கும் நீண்டகால ஒப்பந்தம் உருவாகி வருகிறது. இனி ஈரான் உட்பட மேற்காசியாவுக்கு பொற்காலம் ஏற்படும். ஈரான் முன்வைத்துள்ள, 10 அம்ச திட்டம் அடுத்தக்கப்பட்ட பேச்சுக்கு அடிப்படையாக பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுக்கு வெற்றி : ஈரான் அறிவிப்பு ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூறியுள்ளதாவது: தாக்குதல்களை நிறுத்தவும், சேதங்களுக்கு இழப்பீடு வழங்கவும், பிராந்தியத்திலிருந்து தன் படைகளை திரும்ப பெறவும் அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. ஒரு மாதத்திற்கு மேலாக அமெரிக்கா அழுத்தம் கொடுத்தும், எதிரியின் எந்தவித காலக்கெடுவிற்கும் அஞ்சாமல் நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளித்து வந்தோம். இறுதியாக எங்கள் 10 அம்சத் திட்டத்தை ஏற்கும்படி கட்டாயப்படுத்தியதன் மூலம், வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ளோம். போரின் மூலம் ஈரானின் அனைத்து நோக்கங்களும் ஏறக்குறைய நிறைவேற்றப்பட்டுவிட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link