டெஹ்ரான்: அமெரிக்காவுக்கு கடற்படை தளத்தை வழங்க மறுத்து, போருக்கு எதிராக கருத்து கூறிய ஸ்பெயின் பிரதமரின் வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் வீசியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் 24 நாட்களாக நீடித்து வருகிறது. குறிப்பாக, வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இதனால், நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வந்து, சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தை சீராக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இந்தப் போரை நிறுத்தக்கூடாது என்பதில் அமெரிக்காவும், ஈரானும் பிடிவாதமாக இருந்து வருகின்றன.
இந்த நிலையில், போருக்கு எதிராக ஸ்பெயின் பிரதமர் கூறிய வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் வீசி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த செய்தியில், ஸ்பெயின் சான்செஸின் புகைப்படம் மற்றும் ‘நிச்சயமாக, இந்தப் போர் சட்டவிரோதமானது மட்டுமல்ல, மனிதநேயமற்றது. நன்றி, பிரதமர்’ என்ற வாசகங்கள் ஆங்கிலம் மற்றும் பாரசீக மொழிகளில் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்களை ஏவுகணைகளில் ஈரான் ராணுவத்தினர் ஒட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஈரான் மீது தாக்குதல் நடத்த ரோட்டா கடற்படைத் தளம் மற்றும் மோரோன் விமானத் தளத்தை வழங்குமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை ஏற்க ஸ்பெயின் மறுத்தது. இதனால், ஸ்பெயினுடனான வர்த்தக உறவுகளை அதிபர் டிரம்ப் துண்டிப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
