டெஹ்ரான் : அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, ‘ஆப்பரேஷன் எபிக் பியூரி’ என்ற பெயரில், ஈரான் மீது நேற்று மிகப்பெரிய வான்வழி தாக்குதலை துவக்கின. இதற்கு பதிலடியாக, சவுதி அரேபியா உட்பட பல மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது, ஈரான் எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மேற்காசியாவில் போர் மூண்டுள்ளது. இதையடுத்து, அந்தப் பிராந்தியத்தில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அவசர உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்காசிய நாடான ஈரான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இடையே, ‘அணுசக்தியை ஆயுதத்திற்கு பயன்படுத்த மாட்டோம்’ என்பதற்கான ஒப்பந்தம் கடந்த 2015ல் கையெழுத்தானது.
ஈரானின் இந்த அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து, தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தன் முதல் பதவி காலத்தின்போது, 2018ல் விலகினார்; தொடர்ந்து, ஈரான் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.
தன்னிடம் அபரிமிதமாக உள்ள யுரேனியம் தாதுவை, ஈரான் செறிவூட்டி வந்தது. இதற்கு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்காகவே, யுரேனியத்தை ஈரான் செறிவூட்டி வருவதாக, மற்றொரு மேற்காசிய நாடான இஸ்ரேல் குற்றஞ்சாட்டியது. மேலும், ஈரான் தன் மீது தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாகவும் இஸ்ரேல் தொடர்ந்து கூறி வந்தது.
அழுத்தம்
கடந்தாண்டு ஜனவரியில், இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின், சில முக்கிய அம்சங்களை சேர்த்து, ஈரானுடன் மீண்டும் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள, டிரம்ப் ஆர்வம் தெரிவித்தார்; ஆனால், ஈரான் மசிந்து கொடுக்கவில்லை.
இதற்கிடையே, கடந்தாண்டு ஜூன் மாதம், அணு ஆயுதங்களை தயாரிப்பதாகக் கூறி, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், தாக்குதல் நடத்தின.
அதில், ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்களை அழித்ததாக அமெரிக்கா கூறியது. ஆனால், ஈரான் தொடர்ந்து யுரேனியத்தை செறிவூட்டும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது.
தற்போது, ஈரானில் பொருளாதார பின்னடைவு காரணமாக, விலைவாசி உயர்ந்துள்ளதைக் கண்டித்து, அந்நாட்டு மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இப்போராட்டத்தை ஒடுக்க, பாதுகாப்புப் படைகளை ஏவிய ஈரான் அரசு, தடைகளை மீறி போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நெருக்கடி
மேலும், அமெரிக்க போர் கப்பல்களை, ஈரான் கடற்பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தார். அணுசக்தி திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட, ஈரானுக்கு டிரம்ப் நிர்வாகம் அழுத்தம் கொடுத்தது. இதையடுத்து, அணுசக்தி திட்டம் குறித்து பேச்சு நடத்த, ஈரான் சம்மதம் தெரிவித்தது.
பேச்சு நடந்ததெல்லாம் ‘ஜுஜுபி?’
இதற்கு மத்தியஸ்தம் செய்ய, மேற்காசிய நாடான ஓமன் ஒப்புக்கொண்டது. ஓமன் தலைநகர் மஸ்கட்டில், கடந்த 6ம் தேதி முதற்கட்டமாகவும், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில், 17ம் தேதி, இரண்டாம் கட்டமாகவும் அமெரிக்கா - ஈரான் இடையே, இரு சுற்று மறைமுக பேச்சுக்கள் நடந்தன.
இதையடுத்து, நேற்று முன்தினம், மூன்றாம்கட்ட பேச்சு, மீண்டும் ஜெனிவாவில் நடந்தது. இப்பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, மத்தியஸ்தம் செய்யும் ஓமன் தெரிவித்திருந்தது; அடுத்தகட்ட பேச்சு, ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் வியன்னாவில் நாளை நடைபெறுவதாகவும் இருந்தது.
இந்நிலையில், மூன்றாம் கட்ட பேச்சு முடிந்த மறுநாளே, ஈரானுடன் நடந்த பேச்சில் தமக்கு திருப்தி இல்லை என்றும், அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு ஈரான் கட்டுப்பட மறுப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். மேலும், சமீபத்தில் அமெரிக்க பார்லிமென்டில் பேசிய டிரம்ப், அமெரிக்காவை தாக்குவதற்கான ஏவுகணைகளை, ஈரான் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
தொடர்ந்து, இஸ்ரேலுடன் இணைந்து, ‘ஆப்பரேஷன் எபிக் பியூரி’ என்ற பெயரில், ஈரான் மீது நேற்று, மிகப்பெரிய வான்வழி தாக்குதலை, அமெரிக்கா நடத்தியது. ஈரான் தலைநகர் டெஹ்ரானின் பல பகுதிகளில் குண்டு வீசப்பட்டன.
ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலகம் மற்றும் அவரின் குடியிருப்பு பகுதி அருகில், ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. அதிபர் மாளிகை, தேசிய பாதுகாப்பு கவுன்சில் அலுவலகம், உளவுத்துறை அமைச்சகம், ராணுவ அமைச்சக அலுவலகங்கள் உள்ளிட்டவை, தாக்குதலுக்குள்ளாகிய முக்கிய இடங்கள்.
போன் இணைப்புகள் ‘கட்!
‘
அணுசக்தி தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இஸ்பஹான், முக்கிய ராணுவ வளாகம் மற்றும் ஏவுகணை சோதனை தளம் அமைந்துள்ள பார்ச்சின், ஈரானின் ஒரே அணு மின் நிலையம் அமைந்துள்ள, துறைமுக நகரமான புஷெர் ஆகிய நகரங்களிலும், குண்டு வீச்சு நடந்துள்ளது.
ஆன்மிக மையமாகவும், நிலத்தடி அணுசக்தி நிலையங்களை கொண்டதாகவும் உள்ள கும், ஏவுகணை தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு தளங்கள் உள்ள கராஜ் மற்றும் கர்மான்ஷா, ஏவுகணை தளங்கள் உள்ள வடமேற்கு ஈரானின் தப்ரீஸ், இலாம் மற்றும் லொரெஸ்தான் உள்ளிட்ட நகரங்கள் குண்டு வீசி தாக்கப்பட்டன.
தாக்குதலுக்கு பின், டெஹ்ரானின் பல பகுதிகளில், மொபைல்போன் மற்றும் இணைய தள சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. ஈரான் ராணுவத்தின் பல தலைமையகங்கள் மற்றும் ராணுவ முகம்கள், குண்டு வீச்சில் அழிக்கப்பட்டுள்ளன. இதில் ஆயிரக்கணக்கான வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணை திறனை, முழுதுமாக அழிப்பதே இத்தாக்குதலின் நோக்கம் என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரானும், இதற்கு பதிலடியாக, இஸ்ரேல், பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு எமிரேட், ஈராக், ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது, ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதுடன், தன் வான்வெளியையும் மூடியுள்ளது. ஈரான் மட்டுமின்றி, இஸ்ரேல், ஜோர்டான் ஆகிய நாடுகளும், தங்கள் வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளன.
ஈரான் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல், நாடு முழுதும் அவசரநிலையை அறிவித்துள்ளது. பள்ளிகள் மூடப்பட்டு, மக்கள் பாதுகாப்பு அறைகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஈரான் தலைவர் கமேனி, தற்போது பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் மீதான தாக்குதலுக்கு ஒரு வகையில் இஸ்ரேலின் அழுத்தமும் காரணமாக கூறப்படுகிறது. ‘ஈரான், காலத்தை கடத்துவதற்காகவே பேச்சு நடத்துகிறது. எனவே, ராணுவ நடவடிக்கை எடுப்பதே ஒரே தீர்வு’ என இஸ்ரேல், அமெரிக்காவை வலியுறுத்தியதே இத்தாக்குதலுக்கு காரணம் என கூறப்படுகிறது.
இதனால், மேற்காசியாவில் போர் மூண்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள் தொடரும் என்று இரு தரப்பும் கூறியுள்ளதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது.
