டெஹ்ரான்: அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதலை அதிகரித்தால், பாப் அல் மண்டப் ஜலசந்தியையும் மூடிவிடுவோம் என்று, ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானுடன் அமைதி பேச்சுக்கு ஐந்து நாட்கள் கெடு விதித்திருந்தார்; அது இன்றுடன் முடிவடைகிறது. அதன் பின், ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மீது, அமெரிக்கா தரைவழி தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், உலக எண்ணெய் வர்த்தகத்தில், ஹார்முஸ் ஜலசந்திக்கு அடுத்தபடியாக உள்ள பாப் அல் மண்டப் ஜலசந்தியையும் மூடுவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஜலசந்தி, ஆசியாவில் உள்ள ஏமன் மற்றும் ஆப்ரிக்காவில் உள்ள ஜிபூட்டி, எரித்திரியா நாடுகளுக்கு இடையே அமைந்துள்ளது.
மேற் காசிய நாடான சவுதி அரேபியாவை ஒட்டியுள்ள இந்த ஜலசந்தி மூலம், உலகின் 10 சதவீத எண்ணெய் கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது.
பாப் அல் மண்டப் ஜலசந்தி, செங்கடலையும், இந்திய பெருங்கடலையும், மேலும் அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைக்கிறது.
இந்தப் பாதை, ஆசியா – ஐரோப்பா வர்த்தகத்திற்கு முக்கியமானது.
ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து தரைவழி தாக்குதல் அல்லது கடற்படை நடவடிக்கைகளை மேற்கொண்டால், பாப் அல் மண்டப் ஜலசந்தியை மறிப்போம் அல்லது கட்டுப்பாட்டில் எடுத்து மூடுவோம் என்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் இந்த அச்சுறுத்தலை, ஏமனை தளமாகக் கொண்ட ஹவுதி பயங்கரவாதிகளின் உதவியுடன் செயல்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.
ஈரான் ஆதரவு பெற்ற இந்த பயங்கரவாதிகள் ஏற்கனவே செங்கடல் பகுதியில் கப்பல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள நிலையில், பாப் அல் மண்டப் ஜலசந்தியும் மூடப்பட்டால், உலகப் பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்திக்கும்.
எண்ணெய் விலை உயரும், பணவீக்கம் அதிகரிக்கும். சர்வதேச கப்பல் நிறுவனங்கள் மாற்று வழிகளை தேட வேண்டிய நிலை ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
