டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில், அண்டை நாடுகளின் மீது தாக்குதல் நடத்தியதற்கு, ஈரான்

டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில், அண்டை நாடுகளின் மீது தாக்குதல் நடத்தியதற்கு, ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியான் மன்னிப்பு கோரினார்.

மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து, கடந்த வாரம் முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில், அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, ராணுவ உயரதிகாரிகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, மேற்காசியாவில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஏவுகணை

குறிப்பாக மேற்காசியாவில் உள்ள சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துபாய், கத்தார், குவைத், ஓமன், ஈராக் உள்ளிட்ட நாடுகளை ஈரான் தாக்கியது.

இந்த நாடுகளில் அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் இருப்பதால், அங்கிருந்து தாக்கலாம் என்ற அச்சத்தில் ஏவுகணை, ட்ரோன் மூலமாக தாக்கியதாக ஈரான் கூறியது.

இதனால், அந்நாடுகளின் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், மேற்காசியா முழுதும் பதற்றம் ஏற்பட்டது. இருப்பினும் ஈரான் மீது எந்த நாடுகளும் பதில் தாக்குதல் நடத்தவில்லை. அதற்கு மாறாக ஈரான் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று மட்டும் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், அண்டை நாடுகள் மீது இனி தாக்குதல் நடத்தமாட்டோம் என்று ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியான் நேற்று அறிவித்துள்ளார். ஈரான் அரசு ‘டிவி’யில் நேற்று ஒளிபரப்பப்பட்ட உரையில், அதிபர் மசூத் பெஷெஸ்கியான் கூறியுள்ளதாவது:

ஈரானால் தாக்கப்பட்ட அண்டை நாடுகளிடம், என் சார்பிலும், நாட்டின் சார்பிலும் மன்னிப்பு கோருகிறேன்.

வலியுறுத்தல்

இந்தத் தாக்குதல்கள் நடந்ததற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். அண்டை நாடுகளுடன் எங்களுக்கு எந்த விரோதமும் இல்லை. அவற்றை ஆக்கிரமிப்பதோ, தாக்குவதோ எங்கள் நோக்கம் இல்லை.

இனி அண்டை நாடுகளைத் தாக்கவோ, ஏவுகணைத் தாக்குதல் நடத்தவோக் கூடாது என, இடைக்கால தலைமை கவுன்சில் முடிவு எடுத்துள்ளது. ஆனால், அந்த நாடுகளில் இருந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பதிலடி கொடுக்கப்படும்.

ஈரான் சரணடைய வேண்டும் என்று அமெரிக்க விரும்புகிறது. இந்த விருப்பம் நிறைவேறாது. ஈரான் மக்கள் சரணடைவார்கள் என்பதை எதிரிகள் தங்கள் கல்லறைக்கு எடுத்துச் செல்லும் கனவாகவே வைத்துக் கொள்ளட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த மன்னிப்பு அறிவிப்பு மேற்காசியாவில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாகக் கருதப் படுகிறது.

சில நாடுகள் மத்தியஸ்தம் செய்ய துவங்கியுள்ளதாக கூறிய ஈரான் அதிபர், போரைத் துவங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை பொறுப்பாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

மன்னிப்புக்கு முன் நடந்த தாக்குதல்

ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியான், அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்ட சில மணி நேரங்களுக்கு முன்பும் அந்நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக்கில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் வயல்களை குறிவைத்து ஈரானிய ட்ரோன்கள் தாக்கின. சவுதி அரேபியாவின், பிரின்ஸ் சுல்தான் விமான தளத்தை நோக்கி பல ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் அனுப்பப்பட்டன. சவுதி அரேபியாவின், ஏவுகணை தடுப்பு அமைப்புகள், அவற்றில் பெரும்பாலானவற்றை வழிமறித்து அழித்துள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்சில், துபாய் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையிலும், அபுதாபியிலும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. கத்தாரின், அல் உதைத் விமான தளம், பஹ்ரைனில் அமெரிக்க 5வது கடற்படை தளம் உள்ள இடத்திலும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டன.

Source link