டெஹ்ரான்: ஈரானில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கீஸ் முகமதிக்கு, அந்நாட்டு நீதிமன்றம் மேலும் ஏழரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரானில் மரண தண்டனை மற்றும் பெண்களுக்கு கட்டாய ஆடை கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு எதிராக, 25 ஆண்டுகளுக்கும் மேலாக குரல் கொடுத்து வருபவர் நர்கீஸ் முகமதி, 53.
பெண்களின் உரிமைகளுக்காகவும், மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வரும் நர்கீஸ் முகமதிக்கு, 2023ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அரசுக்கு எதிரான போராட்டங்களுக்காக அவர் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். 10 ஆண்டுகளில் பெரும்பாலும் சிறையிலேயே கழித்த அவருக்கு, மேலும் ஒரு வழக்கில் குற்றம் செய்ய கூடுதல், சுட்டுச்சதி செய்தல் என்ற அடிப்படையில் 6 ஆண்டுகள், பரப்புரை செயல்பாடுகளுக்கு கூடுதலாக ஒன்றரை ஆண்டுகள் என மொத்தமாக ஏழரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டை விட்டு வெளியேற இரண்டு ஆண்டுகளுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை விவரத்தை நர்கீஸ் முகமதி வக்கீல் உறுதி செய்துள்ளார்.
இதையும் சேர்த்து அவரது மொத்த சிறை தண்டனை காலம் என்பது 44 ஆண்டுகளை தாண்டியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
