டெஹ்ரான்: போர் நிறுத்த கோரிக்கையை ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி நிராகரித்தார். அவர் போரினால் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு இழப்பீடு கோரியுள்ளார்.
மேற்காசிய நாடான ஈரான் மீது, அணுசக்தி அச்சுறுத்தலை காரணம் காட்டி அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த 28ம் தேதி போரை துவக்கின. இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் தன் அண்டை நாடுகளில் உள்ள எரிவாயு நிலையங்கள் மற்றும் மேற்காசிய பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான்-அமெரிக்கா, இஸ்ரேல் போர் முடிவுக்கு வரும் என அதிபர் டிரம்ப் சூசகமாக தெரிவித்து இருந்தார்.
அவர் கூறுகையில், ”எங்களது நோக்கங்கள் நிறைவேறும் தருவாயில் உள்ளதால் மத்திய கிழக்கில் ராணுவ நடவடிக்கைகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். தற்போது, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி போர் நிறுத்த கோரிக்கையை நிராகரித்தார். அவர் கூறியதாவது:
உத்தரவாதங்கள் மற்றும் இழப்பீடுகளுடன் போர் நிரந்தரமாக முடிவடையும் வரை ஈரான் தன்னைத் தற்காத்துக் கொள்ளும். போர் நிறுத்தத்தை ஈரான் ஏற்காது. கடந்த ஆண்டு நிலைமை மீண்டும் ஏற்பட ஈரான் விரும்பவில்லை. இந்தப் போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய எந்தவொரு முயற்சியையும் நாங்கள் வரவேற்கிறோம்; கோரிக்கைகளை கேட்கவும், பரிசீலிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
தற்போது, சில நாடுகள் ஒரு தீர்வைக் காண முயற்சிக்கும் வேளையில், அமெரிக்கா தனது ஆக்கிரமிப்பை நிறுத்தத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, நாங்கள் தொடர்ந்து எங்களைப் பாதுகாத்துக் கொள்வோம். போர் தொடர்பான எந்தவொரு முடிவும் முழுமையானதாகவும் நிரந்தரமானதாகவும் இருக்க வேண்டும்.
இது போன்ற ஒரு மோதல் மீண்டும் நிகழாது என்பதற்கான உத்தரவாதங்கள் அளிக்கப்பட வேண்டும். ஈரானுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அப்பாஸ் அராக்சி கூறினார்.
