டெஹ்ரான்: மேற்கு ஆசியாவில் 12வது நாளாக நேற்றும் போர் தொடர்ந்த நிலையில், அப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய பொருளாதார மையங்கள் மற்றும் வங்கிகளே அடுத்த குறி என ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு ஆசிய நாடான ஈரானில் இஸ்லாமிய குடியரசு ஆட்சியை அகற்ற, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. பதிலுக்கு அப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது, ஈரான் குண்டு வீசி வருகிறது.
இந்நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஒரு வங்கி மீது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தியதாகவும், வங்கி ஊழியர்கள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, ஈரான் ராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
எங்கள் நாட்டின் பொருளாதார நிறுவனங்கள் மீது, எதிரிகள் தாக்கி உள்ளனர். நாங்களும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய, மேற்காசிய நாடுகளில் உள்ள பொருளாதார மையங்கள் மற்றும் வங்கிகளை தாக்குவோம்.
அதை செய்வதற்கான சுதந்திரத்தை அவர்களே எங்களுக்கு வழங்கி விட்டனர். அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களான ‘கூகுள், மைக்ரோசாப்ட், என்விடியா, ஆரக்கிள்’ ஆகியவற்றின் அலுவலகங்கள் மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்புகள் புதிய இலக்குகளாக இருக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தாக்குதல் கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
ஈரான் அனுப்பிய ட்ரோன்களில் இரண்டு, துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே விழுந்ததில், இந்தியர் ஒருவர் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.
