டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க டிரம்ப் விதித்த 48 மணி நேரம் கெடு முடிவதற்குள் எதிரிகளின் கப்பல்களை தவிர, மற்ற அனைத்து கப்பல்கள் போக்குவரத்திற்கும் ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருக்கும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
உலகளாவிய கச்சா எண்ணெய் வினியோகத்தில் கிட்டத்தட்ட 20 சதவீதம் முக்கிய நீர் வழிப்பாதை ஹார்முஸ் ஜலசந்தி. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தொடுத்துள்ள போரால் இந்த ஜலசந்தியை ஈரான் மூடியிருக்கிறது. அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் கப்பல்கள், அவர்களின் நட்பு நாடுகளின் கப்பல்களை இதன் வழியாக அனுமதிக்க முடியாது என்று கண்டிப்புடன் ஈரான் அறிவித்து இருக்கிறது.
இதை கண்டித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், 48 மணி நேரத்திற்குள் ஜலசந்தியை திறக்க வேண்டும். இல்லாவிட்டால் ஈரான் மின் உற்பத்தி கட்டமைப்புகளை தாக்குவோம் என்று அறிவித்தார்.
இந் நிலையில், எதிரி நாடுகளின் கப்பல்களை தவிர மற்ற அனைத்து கப்பல்களின் போக்குவரத்திற்கும் ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருக்கும் என்று ஈரான் அறிவித்துள்ளது. இது குறித்து ஐநா கடல்சார் முகமைக்கான ஈரானின் பிரதிநிதி அலி மூசாவி கூறியதாவது;
வளைகுடாவில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்த சர்வதேச கடல்சார் அமைப்புடன் ஒத்துழைக்க டெஹ்ரான் தயாராக உள்ளது. ஈரானின் எதிரிகளுடன் தொடர்பில்லாத கப்பல்கள் டெஹ்ரானுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பதன் மூலம் அந்த நீர்வழியைக் கடந்து செல்லலாம்.
ராஜதந்திரமே ஈரானின் முன்னுரிமையாக உள்ளது. இருப்பினும், பரஸ்பர நம்பிக்கை அதை விட முக்கியமானவை. ஹார்முஸ் ஜலசந்தியில் தற்போது நிலவும் சூழலுக்கு ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்கா நாடுகளின் தாக்குதல்களே மூலக்காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
