டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் திறக்காவிட்டால், மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிடங்குகள் மற்றும் கார்க் தீவு உள்ளிட்ட எரிசக்தி உள்கட்டமைப்புகளைத் தாக்குவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: ஈரானில் நமது ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, ஒரு புதிய மற்றும் மிகவும் நியாயமான ஆட்சியுடன் அமெரிக்கா தீவிரப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. தற்போது பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஏதேனும் காரணத்தால் விரைவில் ஒரு உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் திறக்காவிட்டால், மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிடங்குகள் மற்றும் கார்க் தீவு உள்ளிட்ட எரிசக்தி உள்கட்டமைப்புகளைத் தாக்குவோம். பெரும்பாலும் விரைவில் ஒப்பந்தம் எட்டப்படும்.
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக பயன்பாட்டிற்குத் திறக்கப்படாவிட்டால், ஈரானில் மீண்டும் எரிபொருள் உள்கட்டமைப்புகளை வெடிவைத்துத் தகர்த்து முற்றிலுமாக அழிப்போம். பழைய ஆட்சியின் 47 ஆண்டுகால பயங்கரவாத ஆட்சியில் ஈரான் படுகொலை செய்த நமது பல வீரர்களுக்கும், மற்றவர்களுக்கும் பழிவாங்கும் விதமாக இது அமையும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
