டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியில் கடற்படையால் வைக்கப்பட்ட கண்ணி வெடிகளின் இருப்பிடத்தை கண்டறிய முடியாமல்

டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியில் கடற்படையால் வைக்கப்பட்ட கண்ணி வெடிகளின் இருப்பிடத்தை கண்டறிய முடியாமல் ஈரான் திணறி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது அமைதி பேச்சுக்கு முட்டுக்கட்டையாக மாறியுள்ளது.

மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தும் போரை நிறுத்துவது தொடர்பான பேச்சு, பாகிஸ்தானில் நேற்று துவங்கியுள்ளது. இது தொடர்பாக முதலில் இரு தரப்பும் அமைதி திட்டத்துக்கான நிபந்தனைகளை வெளியிட்டன.

அமெரிக்காவின் முக்கிய நிபந்தனை, கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறக்க வேண்டும் என்பதுதான். ஆனால், ஹார்முஸ் ஜலசந்தி தங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும், கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஈரான் கூறியுள்ளது.

இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அதிகளவில் கடல் கண்ணி வெடிகள் வைத்துள்ளதாகவும், அதன் பெரும்பகுதி ஆபத்தான பகுதியாக ஈரான் அறிவித்தது. இதனால், கச்சா எண்ணெய் கப்பல்கள் போக்குவரத்து மீண்டும் முடங்கியுள்ளது.

இந்நிலையில், கடலில் எங்கெங்கு கண்ணி வெடிகள் வைக்கப்பட்டன என்பது குறித்த தகவல்கள், ஈரானுக்கே தெரியவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இதனால் அவற்றை கண்டறிய முடியாமல் ஈரான் திணறி வருவதாக கூறப்படுகிறது. இதனால் முழு கடற்பகுதியுமே தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது. கண்ணி வெடிகளை வைப்பது எளிது; ஆனால், அதை அகற்றுவதற்கு நவீன தொழில்நுட்பம் தேவை. அது ஈரானிடம் தற்போது இல்லை என கூறப்படுகிறது.

இதனால்தான், உடனடியாக ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காமல், ஈரான் பல காரணங்களை மாறி மாறி கூறி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் தற்போது, அமைதி பேச்சுக்கு முட்டுக்கட்டையாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

Source link