டேராடூன்: நம் நாட்டின் புதிய குற்றவியல் சட்டங்களை திறம்பட கையாள்வதிலும், நீதி அமைப்புகளின், ‘டிஜிட்டல்’ மயமாக்கும் செயல்பாடுகளை அமல்படுத்துவதிலும், தேசிய அளவில் உத்தராகண்ட் மாநிலம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
நம் நாட்டின் நீதித்துறையை நவீனமயமாக்குவதுடன், வழக்கு விசாரணையை வேகப்படுத்துதல், வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துதல், தகவல் பகிர்வை எளிதாக்கும் முயற்சியாக, ஐ.சி.ஜே.எஸ்., எனப்படும், குற்றவியல் நீதி அமைப்பு என்ற டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் போலீஸ், நீதிமன்றங்கள், சிறைகள், தடயவியல் பிரிவு, வழக்கு விசாரணை ஆகிய ஐந்து துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.இதன்படி போலீசார் ஒரு வழக்குப் பதிவு செய்து, கணினியில் பதிவேற்றினால், அது மற்ற அனைத்து துறைகளும் எளிதில் கையாள முடியும்.
தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, இந்த டிஜிட்டல் முறையை சிறப்பாக செயல்படுத்திய முதன்மை மாநிலமாக உத்தராகண்ட் திகழ்வது தெரியவந்துள்ளது.அந்த மாநிலம், 93.46 சதவீதம் என்ற செயல்திறன் புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஹரியானா, அசாம், சிக்கிம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.
உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான அரசு, தொடர்ந்து கண்காணித்து, புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்தியதன் விளைவாக, இந்த சாதனை சாத்தியமானதாக கருதப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, ‘இ – சாக்ஷ்யா’ செயலி மூலம் குற்றச்சம்பவங்களை வீடியோ எடுப்பதும், டிஜிட்டல் ஆதாரங்களை பாதுகாப்பாக சேமிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதேபோல் புதிய குற்றவியல் சட்டங்களின் விதிகள் குறித்து உத்தராகண்ட் மாநிலத்தில் மட்டும், 23,000க்கும் மேற்பட்ட போலீசாருக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்த, ஏ.ஐ., தொழில்நுட்பம் குறித்து, ‘நியாய ஸ்ருதி’ என்ற மெய்நிகர் நீதிமன்ற விசாரணைகள் மற்றும் தடயவியல் நடமாடும் வாகனங்கள் போன்ற வசதிகள் கிடைக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளன.
