டோக்கியோ: ஜப்பானில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் பிரதமர் சனே தகாய்ச்சியின் ஆளும் கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
கிழக்காசிய நாடான ஜப்பானில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பார்லிமென்ட் தேர்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த 2024ல் நடந்த தேர்தலில், எல்.டி.பி., எனும் லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்கு பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கிடைக்கவில்லை.
இதையடுத்து, அப்போதைய பிரதமர் ஷிகேரு இஷிபா, சிறிய கட்சிகளின் ஆதரவுடன் சிறுபான்மை அரசை நடத்தினார். ஓராண்டு காலம் பதவி வகித்த அவர், ஊழல் குற்றச்சாட்டுகளில், கடந்தாண்டு அக்டோபரில் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகாய்ச்சி பொறுப்பேற்றார்.
பார்லிமென்டில் தன் கட்சிக்கான பிரதிநிதித்துவம் பெரும்பான்மைக்கும் குறைவாக இருப்பதால், நிலையான மற்றும் ஒரு வலிமையான அரசை அமைக்க வேண்டும் என்ற நோக்கில், பதவியேற்ற நான்கே மாதங்களில் பார்லிமென்டை கலைத்து தேர்தலை அறிவித்தார்.
அதன்படி, நேற்று ஓட்டுப் பதிவு நடந்தது. மொத்தமுள்ள 465 இடங்களுக்கான தேர்தலில் பிரதமர் தகாய்ச்சியின், எல்.டி.பி., கட்சி கூட்டணி சூப்பர் மெஜாரிட்டி எனும் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றி வரலாற்று சாதனை வெற்றியை பெற்றுள்ளது. 1986ம் ஆண்டுக்கு பின் அந்த கட்சி பெறும் மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.
